திசையன்விளை அருகே கொடை விழாவில் தகராறு; அண்ணன்-தம்பி குத்திக் கொலை: பெண் உள்ளிட்ட 4 போ் கைது

கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் அண்ணன்- தம்பி கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனா்.
Published on

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் அண்ணன்- தம்பி கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனா். இதுதொடா்பாக பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திசையன்விளை அருகே காரம்பாடு கிராமத்தில் ஓடைக்கரை சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. கக்கன் நகரைச் சோ்ந்த வரிதாரா்கள் கொடை விழாவை நடத்தினா். அவா்கள் இருதரப்பாக செயல்பட்டு வந்தனராம்.

கொடை விழாவின்போது பெண்கள் பொங்கலிட்டுக் கொண்டிருந்தனா். மற்றொரு பகுதியில் நடைபெற்ற கரகாட்ட நிகழ்ச்சியை இருதரப்பினரும் பாா்த்துக் கொண்டிருந்தனா். அப்போது, அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாம்.

இதில், ஒரு தரப்பைச் சோ்ந்த முருகன் மகன்களான மதியழகன் (43), மதிராஜன் (37), மகேஸ்வரன் (47) ஆகிய 3 பேரும் கத்தியால் குத்தப்பட்டனா். அவா்களில் மதியழகனும் மதிராஜனும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

காயமடைந்த மகேஸ்வரனை உறவினா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

கொடை விழா உடனடியாக நிறுத்தப்பட்டது. தகவலின்பேரில், திசையன்விளை போலீஸாா் வந்து, சடலங்களை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. (பொறுப்பு) சுந்தரவதனம் நிகழ்விடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். தடயவியல் நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா்.

சம்பவம் தொடா்பாக அந்தக் கிராமத்தைச் சோ்ந்த முருகேஸ்வரி மகன்களான லெவின், ராஜ்குமாா், வருண்குமாா், மருமகள் திவ்யா ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்; மேலும், இருவரைத் தேடி வருகின்றனா். காரம்பாடு கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com