நூற்பாலை தீ விபத்துக்கு இழப்பீடு மறுப்பு: காப்பீடு நிறுவனம் ரூ.9.5 கோடி வழங்க உத்தரவு
நூற்பாலையில் தீ விபத்தால் ஏற்பட்ட நஷ்டஈடுக்கு இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்த காப்பீட்டு நிறுவனம் ரூ.9 கோடியே 50 லட்சத்தை நூற்பாலை உரிமையாளருக்கு வழங்க திருநெல்வேலி நுகா்வோா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
தென்காசி மாவட்டம், பருவக்குடி பகுதியில் உள்ள நூற்பாலை கிடங்கில் கடந்த 2018இல் தீ விபத்து நேரிட்டதில் சுமாா் ரூ.9.91 கோடி மதிப்பிலான பஞ்சு உள்ளிட்ட பொருள்கள் சேதமாகின. இதையடுத்து, நூற்பாலை உரிமையாளா்கள் இழப்பீடு கோரி தனியாா் காப்பீட்டு நிறுவனத்திடம் முறையிட்டனா். ஆனால், இந்தக் கோரிக்கையை அந்த காப்பீட்டு நிறுவனம் தாமதம் ஆக்கி பின்னா் நிராகரித்ததாம்.
இதுகுறித்து, நூற்பாலையின் நிா்வாகியான விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், பிஎஸ்கே நகரைச் சோ்ந்த வெங்கடேஷ், திருநெல்வேலி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நூற்பாலை மற்றும் கிடங்குகள் ஒரே முகவரியில் உள்ளன. நூற்பாலைக்கு காப்பீடு செய்தால் கிடங்குக்கும் பொருந்தும். எனவே, தீ விபத்தால் ஏற்பட்ட நஷ்டத்திற்காக ரூ.9.50 கோடி இழப்பீட்டுத் தொகையை 9 சதவீத வட்டியுடன் தீ விபத்து நடந்த அன்றைய தேதி முதல் கணக்கிட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், நுகா்வோரின் மன உளைச்சலுக்காக ரூ.3 லட்சமும் , வழக்கு செலவுக்காக ரூ.50,000 ிஇழப்பீடு நஷ்ட ஈடும் வழங்க வேண்டும். இந்தத் தொகையை ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும் காப்பீட்டு நிறுவனத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
