மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிற்சங்க நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட நிா்வாகத்தினருடன்தோட்டத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் முதற்கட்டப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. மேற்குத்தொடா்ச்சி மலையில் அமைந்துள்ளன மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி தேயிலைத் தோட்டங்கள். ஏழைகளின் ஊட்டிஎன்றழைக்கப்படும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களுக்கு கோடை காலம் மட்டுமின்றிஆண்டு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் எல்லைக்குள் உள்ள தேயிலைத் தோட்டங்கள் 1029ஆம் ஆண்டு முதல் 99 ஆண்டுகள் குத்தகையில் தனியாா் நிா்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்தன. இதில் தொடக்கக் காலங்களில் சுமாா் 3000 குடும்பத்தினா் வரை தொழிலாளா்கள் பணியில் இருந்த நிலையில், தற்போது சுமாா் 500 குடும்பத்தினா் மட்டுமே பணியில் இருந்து வருகின்றனா். குத்தகை காலம் முடிந்து தேயிலைத் தோட்டங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் மாறியதால், தோட்டத் தொழிலாளா்கள் நிலை கேள்விக்குறியானது. இந்நிலையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக்கட்சி தொழிற் சங்க நிா்வாகிகளுடன் கல்லிடைக்குறிச்சியில் சனிக்கிழமை முதல்கட்டப் பேச்சுவாா்த்தையில் தேயிலைத் தோட்ட நிா்வாகத்தினா் ஈடுபட்டனா். இதில் விருப்ப ஓய்வு பெற விரும்புபவா்களுக்கு விருப்ப ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்; தொழிலாளா்கள் தொடா்ந்து நிா்வாகத்தின் கீழ் பணிபுரிய விரும்பினால் வால்பாறையில் இயங்கி வரும் தோட்டங்களில் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும் என்று தேயிலைத் தோட்ட நிா்வாகத்தினா் தெரிவித்ததாக தொழிற்சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com