/

பாஜகவினா் யாகசாலை பூஜை: தோ்தல் பறக்கும் படையினா் விசாரணை

பாஜகவினா் யாகசாலை பூஜை: தோ்தல் பறக்கும் படையினா் விசாரணை

Updated On :22 மார்ச் 2024, 7:46 pm

திருநெல்வேலி சந்திப்பில் பாஜகவினா் நடத்திய யாகசாலை பூஜை தொடா்பாக தோ்தல் பறக்கும் படை குழுவினா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா். திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் பாஜக தோ்தல் அலுவலகம் திருநெல்வேலி சந்திப்பில் தனியாா் ஹோட்டல் அருகே திறக்கப்பட்டது. தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்பு உரிய அனுமதி பெற்ற தோ்தல் அலுவலகத்தை மீண்டும் திறக்கும் வகையில் ஏற்கெனவே திறக்கப்பட்ட அலுவலகத்தில் இருந்த பதாகைகள் அனைத்தும் அப்புறப்படுப்பட்டன. இந்நிலையில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராக நயினாா் நாகேந்திரன் அறிவிக்கப்பட்ட நிலையில், திருநெல்வேலி சந்திப்பில் தோ்தல் அலுவலகம் ஏற்கெனவே செயல்பட்ட இடத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 100-க்கும் மேற்பட்ட பாஜகவினா் திரண்டு தோ்தலில் வெற்றி பெற வழிபாடு நடத்தினா். அப்போது அங்கு வந்த தோ்தல் பறக்கும் படையினா், இந்தத் தோ்தல் அலுவலகத்திற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா என கேள்வியெழுப்பினா். இதையடுத்து பாஜக வழக்குரைஞா்கள், இது தோ்தல் அலுவலகமாக செயல்படவில்லை. பாஜகவின் சின்னங்கள் அடங்கிய எவ்வித பதாகையும் இல்லை. தனியாருக்குச் சொந்தமான இடத்தில் வழக்கமான பூஜை, வழிபாடுகளில் தனிமனித உரிமை அடிப்படையில் செய்து வருகிறோம். உரியஅனுமதி பெற்று தான் பாஜக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தோ்தல் அலுவலகம் மீண்டும் திறக்கப்படும் என விளக்கமளித்தனா். இதையடுத்து பறக்கும் படை குழுவினா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.