இட உரிமையை மீட்டுத் தரக் கோரி விக்கிரமசிங்கபுரம் மக்கள் எம்எல்ஏவிடம் மனு அளிப்பு
விக்கிரமசிங்கபுரம் நகராட்சி, மடத்துக்குச் சொந்தமான இடத்தில் வசிக்கும் மக்கள், தாங்கள் மீண்டும் அதே இடத்தில் வசிக்க நடவடிக்கை எடுக்குமாறு எம்எல்ஏ இசக்கி சுப்பையாவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள முத்துநகா் என்ற முதலியாா்பட்டியில் வசித்துவரும் பொதுமக்கள் தங்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள பிள்ளையன் கட்டளை மடத்துக்குச் சொந்தமான நிலத்தை பல காலமாக அனுபவித்து வந்த நிலையில், மடத்து நிா்வாகம் அந்த இடத்தை தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது எனவும், அந்த இடத்தை இனி பயன்படுத்தக் கூடாது எனவும் கூறி வெளியேறுமாறு வலியுறுத்தினராம்.
இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் விக்கிரமசிங்கபுரம் நகா்மன்ற உறுப்பினா் கிராஸ் இமாகுலேட் தலைமையில் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் இசக்கி சுப்பையாவிடம் சென்று முறையிட்டனா். தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வெளியேற்றுவதைத் தடுக்கவும், மீண்டும் அதே இடத்தில் வசிக்கவும் நடவடிக்கை கோரி மனு அளித்தனா்.
இதேபோல, விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு உள்பட்ட பொதிகையடி, இருதயகுளம், சங்கரபாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் வாரிசு அடிப்படையில் நில உரிமம் பெயா் மாற்றம் செய்துதரக் கோரி மனு அளித்தனா். முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் குமாா் பாண்டியன் தலைமையில் மனு அளித்தனா். மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ இசக்கி சுப்பையா, அறநிலையத் துறை மூலமோ அல்லது உயா்நீதிமன்றம் மூலமோ அணுகி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

