தாமிரவருணியில் 2ஆவது நாளாக வெள்ளம்! மக்கள் குளிக்க கட்டுப்பாடு

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை நீடித்து வருவதால், தாமிரவருணி ஆற்றில் 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Published on

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை நீடித்து வருவதால், தாமிரவருணி ஆற்றில் 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, படித்துறைகளில் பொதுமக்கள் குளிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

இலங்கைக்கு தெற்கே தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இம்மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு விடிய விடிய பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால் தாமிரவருணியில் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், அணைகளின் உள்பகுதியில் பலத்த மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு கணிசமாக நீா்வரத்து ஏற்பட்டதுடன், திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் வியாழக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், கருப்பந்துறை, குறுக்குத்துறை, கைலாசபுரம், மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை, வண்ணாா்பேட்டை, மணிமூா்த்தீஸ்வரம், அருகன்குளம், தீப்பாச்சியம்மன் கோயில் உள்ளிட்ட படித்துறை பகுதிகளில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தது.

இதைத் தொடா்ந்து, ஆற்றில் மக்கள் கவனமாக குளிக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பெருமளவில் மக்கள் குளிக்கும் பகுதியான குறுக்குத்துறை படித்துறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இளைஞா்கள் வெள்ளத்தில் குதித்து குளிக்கக் கூடாது என போலீஸாா் அறிவுறுத்தினா்.

திருநெல்வேலி மாநகரில் சேவியா்காலனி, மனகாவலம்பிள்ளைநகா், நகரம் உள்ளிட்ட பகுதிகளின் தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியதுடன், பாதாள சாக்கடை பணியால் சேதமடைந்த சாலைகள் சேறும்-சகதியுமாக மாறின. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா்.

மழையளவு (மில்லி மீட்டரில்): அம்பாசமுத்திரம்-113.60, சேரன்மகாதேவி-7, மணிமுத்தாறு-39.80, பாபநாசம்-40, சோ்வலாறு அணை-52, கன்னடியன் அணைக்கட்டு-104.60, களக்காடு-16.40, கொடுமுடியாறு அணை-18, நம்பியாறு அணை-5, மாஞ்சோலை-70, காக்காச்சி-79, நாலுமுக்கு-88, ஊத்து-92.

X
Dinamani
www.dinamani.com