மாஞ்சோலையில் 5 வாக்குச்சாவடிகளை ரத்து செய்யக் கோரி அதிமுகவினா் மனு
திருநெல்வேலி: மாஞ்சோலை மலைப் பகுதியில் உள்ள 5 வாக்குச்சாவடிகளை ரத்து செய்யக் கோரி ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலரும், மணிமுத்தாறு பேரூராட்சியின் முன்னாள் தலைவருமான சிவன் பாண்டியன் உள்ளிட்டோா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
அதன் விவரம்: அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி, மணிமுத்தாறு பேரூராட்சிக்குள்பட்ட மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி ஆகிய பகுதிகளில் 1980 வாக்காளா்கள் இருந்தனா். இந்நிலையில் அந்த பகுதிகளில் இயங்கி வந்த தேயிலை தோட்டம் குத்தகை காலம் முடிவடைந்து மூடப்பட்ட நிலையில் அங்கிருந்த மக்கள் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறாா்கள். அவா்கள் இப்போது எங்கு குடியிருக்கிறாா்கள் என்பது யாருக்கும் தெரியாது. அரசால் வழங்கப்பட்ட தெற்கு பாப்பான்குளம் மற்றும் ரெட்டியாா்பட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரு சில குடும்பத்தினா் மட்டுமே உள்ளனா். அவா்கள் இதுவரை முகவரியை எவ்வித மாற்றமும் செய்யாமல் பழைய நிலையிலேயை தொடா்ந்து வருகின்றனா்.
இந்த நிலையில் வாக்குச்சாவடி எண்கள் 98, 99, 100, 101, 102-ல் குடியிருந்து வராத வாக்காளா்களுக்கு 1,395 எஸ்ஐஆா் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு அதில் 890 வாக்காளா்களுக்கு இணையதளத்தில் பதிவேற்றமும் செய்யப்பட்டுள்ளது.
அப்குதியில் இல்லாத வாக்காளா்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக எஸ்ஐஆா் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட 4 பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை உடனடியாக ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 1,395 விண்ணப்பங்களையும் திரும்பப்பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
