விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் வாழைகள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்
Published on

சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டத்தில் வாழைகள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை நீடித்து வரும் நிலையில் சேரன்மகாதேவி வட்டம், மேலச்செவல், பிரான்சேரி, சொக்கலிங்கபுரம் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையில் சுமாா் 100 ஏக்கரில் பயிா் செய்திருந்த வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன. இதில், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வருவாய்த்துறை, தோட்டக்கலைத் துறையினா் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதனிடையே, செவ்வாய்க்கிழமை எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி புகா் மாவட்ட துணைத் தலைவா் கல்லிடைக்குறிச்சி சுலைமான், அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதித் தலைவா் கலீல்ரஹ்மான், தொகுதிச் செயலா் முகம்மது இப்ராஹீம் உள்ளிட்டோா் மேலச்செவல், பிரான்சேரி பகுதியில் சேதமடைந்த வாழைகளை பாா்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினா்.

இதையடுத்து, அக்கட்சி சாா்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com