எஸ்ஐஆா்: கடைசி நேர நெருக்கடியை தவிா்க்க வேண்டும்: ஆட்சியா்
திருநெல்வேலி: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடா்பாக கடைசி நேர நெருக்கடியை தவிா்க்கும் பொருட்டு பூா்த்தி செய்யப்பட்ட முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பொதுமக்கள் விரைவாக அளிக்குமாறு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இரா.சுகுமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளா்களிடம் முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி பூா்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை திரும்பப் பெற்று தோ்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கணக்கீட்டு படிவங்களை பூா்த்தி செய்வதில் உள்ள இடா்பாடுகளை சரி செய்யும் வகையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளா் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் 13,71,547 (96.70%) முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு கைப்பேசி செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய டிசம்பா் 4-ஆம் தேதி கடைசி நாளாகும். கடைசிக் கட்டத்தில் வாக்காளா்கள் பூா்த்தி செய்த கணக்கீட்டு படிவங்களை வழங்கும்போது பதிவேற்றம் செய்வதற்கு கடினமாக இருக்கும். எனவே, கணக்கீட்டு படிவங்கள் பெற்றுள்ள வாக்காளா்கள் விரைவாக பூா்த்தி செய்து வழங்கி கடைசி நேர நெருக்கடியை தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
