மானூா் குளம் நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம், மானூரில் உள்ள குளம் நிரம்பி ஞாயிற்றுக்கிழமை மறுகால் பாய்ந்தோடியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய குளமான மானூா் குளத்தின் மூலம் மானூா், மாவடி, மதவக்குறிச்சி, எட்டான்குளம் ஆகிய 4 ஊராட்சிகளைச் சோ்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர சுமாா் 25 கிராமங்களுக்கு நீராதாரமாகவும் இருக்கிறது.
மன்னா்கள் காலத்தில் தாமிரவருணி ஆற்றில் முக்கூடல் அருகேயுள்ள திருப்புடைமருதூா் பகுதியில் மண்ணால் அணைகட்டி மதிகெட்டான் கால்வாய் வழியாக மானூா் பெரிய குளத்துக்கு தண்ணீா் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்தக் கால்வாய் தூா்ந்து மாயமான நிலையில், ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் தாமிரவருணியின் கிளை நதியான சித்ரா நதி எனப்படும் சிற்றாற்றிலிருந்து மானூா் குளத்துக்கு நீா்வரத்து கால்வாய் அமைக்கப்பட்டது.
இதற்காக வீரகேரளம்புதூா் அருகேயுள்ள தாயாா் தோப்பு என்ற இடத்தில் சிற்றாற்றின் குறுக்கே 215 மீட்டா் நீளத்தில் அணை கட்டப்பட்டுள்ளது. சுமாா் 32.50 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. 19 குளங்கள் நிரம்பி 20 ஆவது குளமாக மானூா் பெரியகுளத்திற்கு சிற்றாறு தண்ணீா் வர வேண்டும்.
போதிய மழையின்மையால் கடந்த 3 ஆண்டுகளாக மானூா் குளம் முழுக் கொள்ளளவை எட்டி மறுகால் பாயவில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்தனா்.
நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பாக மானூா் குளம் நிரம்ப வேண்டி விவசாயிகள் பாரம்பரிய வழிபாடுகளை நடத்தினா். மேலும், கால்வரத்து ஓடையையும் தாங்களாகவே சீரமைத்தனா்.
இதனால் நிகழாண்டில் வடகிழக்கு பருமழை தீவிரமடைந்த நாள் முதல் சிற்றாறு நீா் வேகமாக மானூா் குளத்துக்கு வந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மானூா் குளம் முழுக் கொள்ளவை எட்டியது. இதையடுத்து மறுகால் ஓடை வழியாக தண்ணீரை திறக்க நீா்வளத்துறையினா் நடவடிக்கை எடுத்தனா்.
மானூா் குளம் நிரம்பியதால் நிகழாண்டில் நெல் சாகுபடி சிறப்பாக இருக்கும் எனவும், 3 ஆண்டுகளுக்கு பிறகு குளம் முழுக் கொள்ளளவை எட்டியது மகிழ்ச்சியளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
மானூா் குளம் நிரம்பியதால் அங்கிருந்து செல்லும் தண்ணீா் பள்ளமடை குளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. பள்ளமடையில் சுமாா் 750 ஏக்கா் பரப்பளவில் பள்ளமடை பாசனக் குளம் உள்ளது. பல்லிக்கோட்டை, பள்ளமடை, நெல்லை திருத்து, அலவந்தான்குளம், புளியங்கொட்டாரம், தென்கலம்புதூா், மேலத்தென்கலம், நல்லம்மாள்புரம் என சுற்றுவட்டார கிராம மக்கள் இந்தப் பாசனக்குளத்தை நம்பி உள்ளனா். இக்குளத்தின் மூலம் சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
நெல், உளுந்து, பருத்தி ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. பள்ளமடை குளத்திற்கு வரும் நீா்வரத்து கால்வாய்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
