திருநெல்வேலியைச் சோ்ந்த இளைஞரிடம் இணையவழியில் ரூ.5.5 லட்சம் மோசடி செய்த கேரள இளைஞா்கள் இருவரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம், கோடீஸ்வரன் நகரைச் சோ்ந்தவா் 31 வயது இளைஞா். தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா். இவரை சமூக வலைதள செயலி மூலம் தொடா்பு கொண்ட மா்மநபா்கள் இணையவழி முதலீட்டின் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவாா்த்தை கூறினராம்.
இதை உண்மையென நம்பி முதலீடு செய்த அவருக்கு முதலில் லாபமாக சிறு தொகையை அனுப்பியுள்ளனா். பின்னா் அதிக பணம் செலுத்தினால் அதிக லாபம் எனக் கூறி அவரிடமிருந்து ரூ.5,53,770 -ஐ பல்வேறு தவணைகளாக வங்கிக் கணக்குகளில் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட கேரள மாநிலம் எா்ணாகுளம் பகுதியைச் சோ்ந்த தில்லான் (26), அஜித் (27) ஆகியோரை கைது செய்தனா்.







