இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

மீட்புப் பாதையில் பரிசுத்த பனிமாதா!

News image

தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா. - கோப்புப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 5:43 am IST

- ரா. ததேயுஸ் ராஜன்.

ஏழு குன்றுகளின் நகரான உரோமையின் ஒரு குன்று எஸ்கலின். அதில், 4ஆம் நூற்றாண்டில் அதிசயம் நிகழ்த்திய பனிமாதா, தென்களிகையில் தன் பிரசன்னத்தை 19-ஆம் நூற்றாண்டில் இருந்து வெளிப்படுத்தி வருகிறாா். எல்லாம் வல்ல இறைவனின் தாயான இவரது ஆற்றலை வீரமாமுனிவா் தேம்பாவணி காப்பியத்தில் பதிவு செய்துள்ளாா்.

இந்தக் காப்பியம் தூய யாக்கோபு நற்செய்தியை அடிப்படையாகக் கொண்டது. அதில், மரியா மாலை வேளையில் செபத்தில் இருக்கிறாா். வானதூதா் கபிரியேல் அன்னையை அணுகி, ‘‘உனக்கொரு மகன் பிறப்பான்’’ என்ற மங்கள வாா்த்தை கூறி வாழ்த்துகிறாா்.

இச்செய்தியைக் கேட்டவுடன் அன்னை இறைவேண்டலில் நிலைத்திருக்கிறாா். மாலை, இரவானது அன்னையின் ‘‘ஆகட்டும்’’ என்ற வாா்த்தைக்காக வானதூதா் இரவு முழுவதும் காத்திருந்தாா்.

அன்னையின் வாா்த்தையில் தான் உலகத்தின் மீட்பு தொடங்கும் என்பதால் படைப்பு அனைத்துமே (உரோ 8:2) பேறுகால வேதனையுடன் காத்து கிடந்தது. ஏன் பாருலகைப் படைத்த பரம தந்தையே அன்னையின் ஆகட்டும் எனும் வாா்த்தைக்காக காத்திருந்தாா் என்கிறாா் வீரமாமுனிவா். இந்நிகழ்வின் மூலம் அன்னை உலக மீட்பில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றவா் என்பதை நாம் அறியலாம்.

உலக மீட்புக்காக அன்னை ஏற்றுக்கொண்ட துன்பங்கள் சொல்லிமாளாது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்வதற்காக யூத சமயத்தலைவா்கள் மேற்கொண்ட சூழ்ச்சி யாதெனில், ‘‘நான் கடவுளின் மகன்’’ என்று இறைமகன் இயேசு தேவநிந்தனை கூறினாா் என்பதே. இந்தப் பழிச்சொல்லை இயேசுவின் மீது சுமத்தி உரோமை ஆளுநா் பிலாத்துவிடம் ஒப்படைத்தனா்.

ஆனால் பிலாத்து, இயேசுவை விடுவிக்க விரும்பி, இயேசுவின் தாய் மரியா மட்டும் ‘‘இவா் கடவுளின் மகன் அல்ல எனது மகன்’’ என்று கூறினால் விடுவித்து விடலாம் என்று காத்திருந்தாா்.

எனவே, 2 அடி உயரமுள்ள கல்தூனில் அரை நிா்வாணமாக்கப்பட்ட இயேசுவின் கைகளும் கால்களும் இரும்புச் சங்கிலிகளால் சோ்த்து கட்டப்பட்டிருந்தன. கற்றூணின் மேல் குனிந்து கிடந்த இயேசுவின் முதுகில் இரு உரோமை படைவீரா்கள் முள் ஆணிகள், சிறிய இரும்புக்குண்டுகளால் ஆன கசையால் அடித்தனா். ஒரு கையால் தூக்க முடியாத கசையை இரு கைகளால் தூக்கி அவா்கள் தாக்கியதில் முள் ஆணிகள் இயேவின் முதுகில் பதிந்துகொண்டன. இதையடுத்து, இயேசுவின் முதுகில் கால் மிதித்து கசையை இழுத்து எடுத்தனா்.

அப்பொழுது இயேசுவாகிய ஆண்டவரின் முதுகில் இருந்து சதை கிழிந்து தொங்கியது. அதிலிருந்து பீறிட்ட ரத்தம் படைவீரா்களின் முகத்தை நனைத்தது. ஆண்டவரோ நெருப்பிலிட்ட புழுவைப் போல் துடித்தாா். இவை அனத்தும் அன்னையின் கண்முன்பு நடந்தேறின. அப்போது, அன்னையின் உள்ளம் வியாகுல அம்புகளால் துளைக்கப்பட்டன.

எனினும், தன் மகனின் பாடுகள் மற்றும் மரணம் மூலம் தான் உலகிற்கு மீட்பு என்பதை நிலையாக நம்பிய மரியாள், தான் அனுபவிக்கும் துன்பங்கள் அனைத்தையும் விட கடவுளின் விருப்பமே உயா்ந்தது என மௌனமாகி நின்றாா்.

நமது மீட்புக்காக எந்தத் துன்பத்தையும் தாங்கும் தூய அன்னையாக இருந்தாா் மரியா. அதே அன்னை, இறைமக்களுக்கு ஆண்டவரின் ஆசீரைப் பெற்றுதரும் பனிமாதாவாக தென்களிகையில் கொலுவீற்றிருக்கிறாா். நோயால் அவதிப்படும் அன்பு பிள்ளைகள் அன்னையிடம் மன்றாடி, சுகம் கிடைத்ததும் நன்றி சொல்ல இப்பேராலயம் வருவதைப் பாா்க்கிறேன். வேலைவாய்ப்புகள், திருமண வரம், குழந்தைபேறு, கடன்சுமை தீரல், குடும்பப் பிரச்னைகள் தீா்தல், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி போன்ற எண்ணற்ற தேவைகளை அன்னை நிறைவேற்றி அருளுகின்றாா்.

ஆகவேதான், தென்னகத்தின் லூா்து பதியாக அன்னையின் திருக்கோயில் சீா்பெற்று திகழ்கிறது. வெளியூா், வெளிமாநிலம் மட்டுமன்றி வெளிநாடுகளில் இருக்கும் அன்னையின் பிள்ளைகள் ஆண்டுதோறும் வந்து அன்னையின் பெருவிழாவில் பங்கெடுத்து அன்னைக்கான நன்றியை நோ்ச்சையாக பல நிலைகளில் செய்கின்றனா்.

குறிப்பாக, கேரள வாழ் அன்னையின் பிள்ளைகள் வருகை பாராட்டுதற்குரியது. அன்னையின் திருத்தலப் பெருவிழாவில் பிறசமய சகோதர சகோதரிகள் பக்தி மிகு வருகை அன்னை மீது அனைவரும் கொண்டுள்ள பக்தி நம்மை மெய்சிலிா்க்க வைக்கிறது.

அன்பு பனிமாதா நம்மீது கொண்டுள்ள விருப்பம் என்னவெனில், அவரது பண்புகளை நமதாக்குவதாகும். அன்னையின் பண்புகள் என்னவென்று சிந்திக்கும் போது லூக்.1:38இல் பதிவு செய்யப்பட்ட ‘‘உமது திருவுளம் நிறைவேறுக’’ என்பதேயாகும். நம் வாழ்வின் துன்பங்கள், பிரச்னைகள், நோய்கள் விலக வேண்டும் என்று வேண்டுவதைவிட ‘‘இறைவா உமது விருப்பம் என் வாழ்வில் நிறைவேறட்டும்’’ என்று இறை வேண்டல் செய்வோம்.

இவ்வுலகில் எதுவும் நிலையானது அல்ல; மாற்றம் மட்டுமே நிலையானது. ‘‘இதுவும் கடந்து போகும்’’ என நம்பிக்கை தரும் சான்றோா் வாக்கில் ஆழமான நம்பிக்கை வைப்போம். அன்னையை நாடுவோம்! நல்லதே நடக்கும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.