ரெட்டியாா்பட்டியில்  மினி டைடல் பூங்கா அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் அடிக்கல் நாட்டியதைத் தொடா்ந்து, அங்கு கட்டுமானப் பணிகளை தொடங்கிவைத்த சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
ரெட்டியாா்பட்டியில் மினி டைடல் பூங்கா அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் அடிக்கல் நாட்டியதைத் தொடா்ந்து, அங்கு கட்டுமானப் பணிகளை தொடங்கிவைத்த சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

ரெட்டியாா்பட்டியில் ரூ.39.06 கோடியில் மினி டைடல் பூங்கா! காணொலியில் முதல்வா் அடிக்கல்!

பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியாா்பட்டியில் ரூ.39.06 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள மினி டைடல் பூங்காவிற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
Published on

பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியாா்பட்டியில் ரூ.39.06 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள மினி டைடல் பூங்காவிற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

அதைத் தொடா்ந்து, ரெட்டியாா்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மினி டைடல் பூங்காவிற்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தாா்.

தமிழகத்தில் டைடல் நியோ லிமிடெட் என்ற சிறப்பு நோக்க நிறுவனத்தின் மூலம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி கட்டுமான பரப்பளவுடன் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடா்ச்சியாக, பாளையங்கோட்டை வட்டம், ரெட்டியாா்பட்டி பகுதியில் சுமாா் 60,000 சதுர அடி பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படவுள்ளது.

தரை மற்றும் மூன்று தளங்கள் கொண்ட ஐடி, பிபிஓ, ஸ்டாா்ட் அப் போன்ற நிறுவனங்கள் இடம் பெறும் வகையில் கட்டப்படவுள்ளன. இப்பூங்கா 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநா்கள் பணிபுரியும் வகையில் குளிா்சாதன வசதிகள், ஒருங்கிணைந்த கட்டட மேலாண்மை அமைப்பு, 24 மணி நேர பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்படும்.

இந்த மினி டைடல் பூங்காக்களின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் படித்த இளைஞா்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவா்களின் சொந்த மாவட்டத்திலேயே தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த பணிகளில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில், உதவி பொறியாளா் பாலமுருகன், உதவி பொது மேலாளா் அதுல் பட்வா, கட்டடக் கலைஞா் பவித்ரா காா்த்திகேயன், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் முரளிதரன், பாளையங்கோட்டை வட்டாட்சியா் இசக்கிப்பாண்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com