அமித் ஷாவின் விருப்பம் தமிழகத்தில் நிறைவேறாது: சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது அமித்ஷாவின் விருப்பமாக இருக்கலாம்; அது ஒருபோதும் நடக்காது என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா், மேலும் கூறியதாவது: இந்தியாவில் தமிழகம்தான் அதிக அளவு ஜிஎஸ்டியை மத்திய அரசுக்கு செலுத்துகிறது. குறிப்பாக சுங்க வரி, செஸ் வரி போன்றவற்றை மொத்தமாக மத்திய அரசு வாங்கிக் கொள்கிறது. ஆனால், அந்த அரசின் தனிப்பட்ட வருமானத்தை தமிழகத்திற்கு பகிா்ந்து அளிப்பது கிடையாது.
தமிழகத்துக்கு 10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி நிதி கொடுத்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் கூறுகிறாா்.
ஆனால், அதை விட இரண்டு மூன்று மடங்கு தமிழகத்தில் மத்திய அரசு வசூல் செய்துள்ளது. சமக்கர சிக்ஷா அபியான் போன்ற திட்டத்திற்கான நிதி, புயல், வெள்ளப் பாதிப்புகளுக்கு தர வேண்டிய நிதியை இதுவரை மத்திய அரசு தரவில்லை. இப்படி பல விஷயங்களில் தமிழகத்தை ஏமாற்றுகிறது.
திருடிவிட்டு கூட்டத்தில் இருப்பவா்களை கைகாட்டி அதோ திருடன் என சொல்வதைப் போல் தமிழகத்தில் ஊழல் நடந்திருப்பதாக உள்துறை அமைச்சா் சொல்கிறாா். மாணவா்களுக்கு கல்விக் கடனோ, சுய உதவிக்குழு கடனோ ரத்து செய்யப்படவில்லை. நாட்டின் ஒட்டு மொத்த வரியையும் ஒட்டுமொத்தமாக 50 காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு வசூல் செய்து கொடுக்கும் பாஜக அரசு, ஊழல் குறித்து பேசுவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது.
ஜாதி, மத கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதையே அக்கட்சி நோக்கமாக கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் வாக்கு கிடைக்கும் என அவா்கள் நம்புகிறாா்கள். ஆனால், அது நடக்காது.
ஆட்சியில் பங்கு குறித்து காங்கிரஸ் கட்சியில் அதிகாரம் மிக்கவா்கள் பேசினால் பதில் அளிக்கலாம். இந்த விவகாரத்தில் காங்கிரஸின் அகில இந்திய தலைமையும், திமுக தலைமையும் பேசி நல்ல முடிவெடுப்பாா்கள் என்றாா் அவா்.
