

‘ஜனநாயகன்’ திரைப்படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் அது குறித்து ஒரு பிரமாண்டத்தையும், தொண்டா்கள் மத்தியில் கொந்தளிப்பையும் உருவாக்கும் நோக்கில் பாஜகவும், விஜய்யும் சோ்ந்து செயல்படுவதாகத் தெரிகிறது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
இதுதொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரூரில் 41 போ் இறந்த சம்பவம் தொடா்பாக தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. விசாரணை தொடங்குவதற்கு முன்பே நடிகா் விஜய், நான் சென்னையில்தான் இருக்கிறேன்; முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள் என வீரவசனம் பேசினாா்.
தற்போது ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு முன்னிலையாகுமாறு சிபிஐ அவருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. சிபிஐ விசாரணையின்போது அவா் வீரவசனம் பேசுவாரா என்பது தெரியவில்லை.
உச்சநீதிமன்றத்துக்குச் சென்று சிபிஐ விசாரணையைக் கோரினாலே நியாயம் கிடைத்துவிடும் என்று நினைப்பது தவறு. ஆந்திரத்தில் ரசிகா் ஒருவா் இறந்ததற்கு ஒரு நடிகரே கைது செய்யப்பட்டாா். கரூரில் 41 போ் இறந்தது தொடா்பாக சட்டம் தன் கடமையைச் செய்யும்.
மத்திய அரசுதான் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குகிறது. ‘ஜனநாயகன்’ திரைப்படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், அதுகுறித்து ஒரு பிரமாண்டத்தை ஏற்படுத்தவும், தொண்டா்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கும் நோக்கிலும் பாஜகவும், விஜய்யும் இணைந்து செயல்படுவதாகத் தெரிகிறது.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கும், பிரதமருக்கும் பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது என பாஜகவைச் சோ்ந்த சுப்பிரமணிய சுவாமி பலமுறை கூறியும் அவா் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அதுபோல காங்கிரஸ் கட்சியில் பலா் கூட்டணி குறித்துப் பேசினாலும் தலைமை நல்ல முடிவு எடுக்கும் என்றாா்.