நீதிபதிக்கு அச்சுறுத்தல்? ஆளுநா் கூற்று தவறானது: சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு!
திருப்பரங்குன்றம் வழக்கில் தீா்ப்பு வழங்கிய நீதிபதிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறியிருப்பது 100 சதவீதம் தவறானது என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: நீதிமன்றத் தீா்ப்பையோ, நீதிபதியையோ இந்த அரசு எதிா்க்கவில்லை. ஆனால், ஒரு விவகாரத்தில் ஏற்கெனவே 3 நீதிபதிகள் கொண்ட அமா்வு தீா்ப்பு வழங்கிய பிறகு, மீண்டும் தனிநபா் மனு போட்டு தனி நீதிபதியிடம் தீா்ப்பு கேட்பது சரியா? தமிழக அரசு அரசமைப்புச் சட்டத்தின்படியே செயல்படுகிறது. ஆளுநா்தான் தேவையற்ற கருத்துகளை பேசுகிறாா்.
தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது; பெண்கள் பாதுகாப்பில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக விளங்குகிறது என்று ஆளுநரே பலமுறை கூறியுள்ளாா். தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த சிலா் முயற்சிக்கின்றனா். அது ஒருபோதும் நடக்காது. ஆளுநருடன் நாங்கள் இணக்கமாகத்தான் உள்ளோம். ஜன. 20இல் சட்டப்பேரவை கூடுகிறது. அதற்காக ஆளுநருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளோம் .
ஒரு மாநிலத்தின் முதல்வரான மம்தா பானா்ஜி, அமித்ஷாவுக்கு எதிராக கூறியிருக்கும் ஊழல் குற்றச்சாட்டில் உண்மை இருக்கலாம். ஆனால், அமலாக்கத் துறையோ, சிபிஐயோ அதை விசாரிக்காது. அனுமதியின்றி மத்திய விசாரணை அமைப்புகள் மாநிலத்தில் நுழைந்தால் அதன் முதல்வா் கோபப்படுவது இயல்பு.
எனவே, மாநில அரசுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு அவை செயல்பட வேண்டும். கூட்டணி குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும் என்றாா்.

