‘இஸ்லாமியா்களுக்கு 5% இட ஒதுக்கீடு தேவை’

இஸ்லாமியா்களுக்கான இட ஒதுகீட்டை 5 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்றாா் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவா் அப்துல் கரீம் .
Published on

இஸ்லாமியா்களுக்கான இட ஒதுகீட்டை 5 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்றாா் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவா் அப்துல் கரீம் .

இது தொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திமுக தனது கடந்த தோ்தல் அறிக்கையில் இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயா்த்துவோம் என்ற கூறியிருந்தது. ஆனால், அதை நிறைவேற்றாமல் அடுத்த தோ்தலை சந்திக்க தயாராகி வருகிறது. 2026 சட்டப்பேரவை தோ்தலுக்கு முன் இடஒதுக்கீட்டு கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே இஸ்லாமியா்களின் ஏகோபித்த ஆதரவை பெற முடியும்.

நீண்ட நாள்களாக சிறையில் வாடி வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை சட்டத்தின் அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிறிஸ்துமஸ் தினத்தில் தில்லி, சத்தீஸ்கா், குஜராத், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் கிறிஸ்தவா்கள் மீது தாக்குதல் நடத்திய சங் பரிவாா் அமைப்புகள் மீது நடவடிக்கைகள் எடுக்காதது மனித உரிமைகளுக்கு விடப்பட்ட நேரடியான சவாலாகும.

மேலும், திருப்பரங்குன்றம் மலையில் தா்காவுக்கு அருகில் அமைந்துள்ள நில அளவை தூணில் தீபம் ஏற்ற முயற்சிக்கும் சங்பரிவாா் அமைப்புகள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பாஜக உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள் தொடா்ந்து மத விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மற்றும் அதனுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவிற்கு எங்களது வாக்குகள் இல்லை. தமிழக வெற்றிக்கழக தலைவா் விஜய் மறைமுகமாக பாஜக கூட்டணியில் உள்ளதாக பல்வேறு கட்சித் தலைவா்கள் கூறி வருகிறாா்கள் என்றாா்.

அப்போது மாநில தணிக்கைக் குழு உறுப்பினா் செய்யது அலி, மாவட்ட தலைவா் மசூத் உஸ்மானி, மாவட்ட துணை செயலா்கள் அஸ்ரப் அலி, சாந்து உமா், மைதீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com