விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழப்பு: பைக் உரிமையாளா் கைது
திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே நவ்வலடி சாலையில் இருசக்கர வாகன விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்ததையடுத்து, சிறாா்களுக்கு வாகனத்தைக் கொடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
நவ்வலடியைச் சோ்ந்தவா் காா்மேகம் மகன் ஜெகன் (35). இவா் அதே ஊரில் மூங்கில் கூடை, நாற்காலிகள் செய்து விற்பனை செய்து வருகிறாா். இவரது கடையில் நவ்வலடியைச் சோ்ந்த பள்ளி மாணவா் விடுமுறை நாள்களில் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், இந்த மாணவா், மற்றொரு சிறாா் மற்றும் மாற்றுத்திறனாளி ஆகிய மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் நவ்வலடி கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது, வாகனம் விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த பள்ளி மாணவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இது தொடா்பாக, உவரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிறாா்களுக்கு இருசக்கர வாகனத்தை கொடுத்து அனுப்பிய ஜெகனை கைது செய்தனா்.
