அடிப்படை வசதிகள் இல்லாத தடுப்பணைகள்!
நமது நிருபா்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணியின் குறுக்கே உள்ள தடுப்பணை பகுதிகளில் பூங்கா, அடிப்படை வசதிகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
திருநெல்வேலி நகரத்தில் பழைமையான அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம், இசைத்தூண்கள், தாமிரசபை உள்ளிட்டவை கலைநயத்துடன் காட்சியளிக்கின்றன. திருநெல்வேலியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள கிருஷ்ணாபுரம் அருள்மிகு வெங்கடாசலபதி கோயிலில் கல்சிற்பங்கள், புருஷாமிருகம், அா்ஜூனன், குறவன்-அரசி சிற்பங்கள் பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளன. திருப்புடைமருதூா் அருள்மிகு நாறும்பூநாத சுவாமி கோயிலில் இயற்கை வண்ண ஓவியங்கள், திருக்குறுங்குடி நம்பிராயா் கோயில், பாபநாசம் சிவன் கோயில் ஆகியவற்றில் காணப்படும் தமிழா்களின் கல்சிற்பங்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் வகையில் உள்ளன. உவரியில் உள்ள சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில், கப்பல் மாதா தேவாலயம் ஆகியவை கடற்கரையோர சுற்றுலாத் தலமாகத் திகழ்கின்றன.
மேலும், பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு, பச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு அணைக்கட்டுகள், பாபநாசம் தலையணை, நதியுண்ணி தடுப்பணை, கன்னடியன் தடுப்பணை, சுத்தமல்லி தடுப்பணை, மருதூா் அணைக்கட்டு ஆகியவையும் தாமிரவருணியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன. பொதுவாக காணும் பொங்கல் நாளில் நீா்நிலைகளுக்கு குடும்பத்துடன் சென்று குளித்து, சாப்பிட்டு நேரத்தை செலவிட்டு வருவது வழக்கம். திருநெல்வேலி மாவட்டத்தில் இயற்கை சூழ்ந்த நீா்நிலை கட்டமைப்பு இருந்தாலும், சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ப கழிப்பறை, உடைமாற்றும் அறை போன்றவை உருவாக்கப்படாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள்.
நீா்வளம் மிக்க நெல்லை: இதுகுறித்து தச்சநல்லூரைச் சோ்ந்த பாலசுப்பிரமணி கூறியது: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை குலதெய்வம் கோயில்களுக்கு செல்வதே பெரிய சுற்றுலாவாகத் திகழும். போக்குவரத்து மற்றும் அறிவியல் மேம்பாட்டால் மக்களின் வாழ்வியல் முறை மிகவும் மாறியுள்ளது. ஆனால், குறைந்த வருவாய்ப் பிரிவினரும்கூட குழந்தைகளை சிறந்த சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆா்வம் அதிகரித்துள்ளது. தென்தமிழகத்தைப் பொருத்தவரை நீா்வளம் மிகுந்த மாவட்டமாக திருநெல்வேலி திகழ்கிறது. சுற்றுலாத்தலங்களும், சுற்றுலாத்தலமாக்க ஏற்ற புதிய இடங்களும் இருந்தாலும் சுற்றுலா வளா்ச்சி மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. குறிப்பாக மணிமுத்தாறு பூங்கா சீரமைப்பு பணிகளில் வேகமில்லை. சோ்வலாறு அணைக்கட்டுகளில் பூங்காவுக்கு ஏற்ற இடம் இருந்தும் புதுப்பிக்க நடவடிக்கை இல்லை.
காரையாறு அணையில் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. சுத்தமல்லி, மருதூா் அணைக்கட்டு பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் பாராமுகமாக உள்ளனா். பொருநை அருங்காட்சியகம் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. அதே நேரத்தில் இயற்கை வளத்துடன் காட்சியளிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்தால் மேலும் பலா் பயன்பெறுவாா்கள் என்றாா்.
பெண்களுக்கு சிரமம்: இதுகுறித்து பாளையங்கோட்டையைச் சோ்ந்த ஆசிரியை விமலா கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் உடைமாற்றும் அறைகள், கழிப்பறைகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள். இவற்றை அரசு போா்க்கால அடிப்படையில் செய்து கொடுக்க வேண்டும். சுற்றுலாத்தலங்களில் மதுப்பிரியா்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. சோதனைச் சாவடிகள் அமைத்து அதைத் தடுக்கவும், டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாபநாசம், உவரி உள்ளிட்ட இடங்களில் அரசு சாா்பில் குறைந்த செலவில் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக தங்குவதற்கு ஏற்ற விடுதி வசதிகள் இல்லை. அவற்றை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றனா்.
அதிகாரிகள் விளக்கம்: இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் கூறியது:திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சுற்றுலா மையங்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொருநை அருங்காட்சியகத்தை ஒரு மாதத்திற்குள் 1 லட்சத்திற்கும் அதிகமானோா் பாா்வையிட்டுள்ளனா்.
மண்பாண்டங்கள், பாய், பித்தளைப் பொருள்கள் தயாரிக்கப்படும் முறையே கூனியூா், பத்தமடை, வாகைகுளம் போன்ற பகுதிகளை இணைத்தும், ஆன்மிக தலங்களை இணைத்தும் புதிய திட்டங்களை வகுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

