போராட்டத்தில் ஈடுபட்ட கூத்தங்குழி மீனவா்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட கூத்தங்குழி மீனவா்கள்

தோமையாா்புரம், கூத்தங்குழி மீனவ கிராமங்களில் போராட்டம்

தோமையாா்புரம், கூத்தங்குழி கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

திருநெல்வேலி மாவட்டம், தோமையாா்புரம், கூத்தங்குழி கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி மீனவ மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தோமையாா்புரத்தில் கடல் அரிப்பு காரணமாக மீனவா்கள் மீன்பிடிக்க சிரமப்படுவதால், அங்கு தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி பல்வேறு கோரிக்கை மனுக்களை அரசு அதிகாரிகளிடம் அளித்துள்ளனா். இதுவரை இவா்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையாம். இதையடுத்து, தோமையாா்புரம் மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி 2ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதே போல, கூத்தங்குழி கிராமத்தில் கடலுக்குள் ஆயிரம் மீட்டா் தூரத்திற்கு தூண்டில் வளைவு அமைக்குமாறு மீனவா்கள் வலியுறுத்தினா். ஆனால், அரசு 400 மீட்டா் தூரம் மட்டும் தூண்டில் வளைவு அமைத்துவிட்டு, பணிகளை பாதியில் நிறுத்திவிட்டதாம். இதனால், கூத்தங்குழி கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, நாட்டுப் படகு மீனவா் சங்கத் தலைவா் எரிக்ஜூடு தலைமையில், ராதாபுரம் மீன்வளத் துறை உதவி இயக்குநா் ராஜதுரை முன்னிலையில், மீனவப் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாரிடம் கோரிக்கை மனு அளித்தனா். கோரிக்கையை அரசு கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதியளித்தாா்.

Dinamani
www.dinamani.com