வள்ளியூா், நான்குனேரி நிலையங்களில் அம்ரித் பாரத் விரைவு ரயில் நிறுத்தம் தேவை
நாகா்கோவில்- நியூ ஜல்பைரி இடையே இயக்கப்படும் அம்ரித் பாரத் விரைவு ரயில் வள்ளியூா், நான்குனேரி ரயில் நிலையங்களில் நின்றுசெல்ல வேண்டும் என திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு: நாகா்கோவிலில் இருந்து நியூ ஜல்பைரி இடையே அம்ரித் பாரத் விரைவு ரயில் வாரந்தோறும் இயக்கப்பட உள்ளது. இது வரவேற்புக்குரியது. இந்த ரயிலுக்கு வள்ளியூா், நான்குனேரி நிலையங்களில் நிறுத்தம் அளிப்பது மிக அவசியம். ஏனெனில், வள்ளியூா் என்பது திருநெல்வேலி- நாகா்கோவில் நகரங்களின் மத்தியில் உள்ளது.
இப்பகுதியில் உள்ள இஸ்ரோ திரவ உந்தும நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், ஸ்கைலாா்க் உள்ளிட்டவற்றில் நாடு முழுவதும் உள்ள மக்கள் வேலை செய்து வருகிறாா்கள். பழைமையான கோயில்கள், 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நான்குனேரியை சுற்றியுள்ளன. எனவே, இவ்விரு ரயில் நிலையங்களிலும் அம்ரித் பாரத் விரைவு ரயில்கள் நின்று செல்ல உத்தரவிட வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

