குமரி கடற்கரைப் பூங்கா பராமரிக்கப்படுமா?
கன்னியாகுமரி கடற்கரையில் பல கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட பூங்கா பராமரிப்பு செய்யப்படாததால் பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.


கன்னியாகுமரி கடற்கரையில் பல கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட பூங்கா பராமரிப்பு செய்யப்படாததால் பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் இரண்டையும் தெளிவாகப் பார்க்கலாம் என்பதால் இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் வந்து செல்வதால் ஆண்டுதோறும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆனால், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலான புதிய திட்டங்களை சுற்றுலாத் துறை மேற்கொள்ளவில்லை என பயணிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய அஸ்தமனக் காட்சிக் கோபுரம் அருகிலிருந்து மணல்தேரி பகுதிவரை ரூ. 14 கோடியில் கொண்டு வரப்பட்ட மெகா சுற்றுலாத் திட்டம் முழுமை பெறவில்லை.
கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்ட நவீன பூங்கா பராமரிப்பு செய்யப்படாததால் பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. இங்குள்ள அலங்கார விளக்குகள் அனைத்தும் துருப்பிடித்து தரையில் சரிந்து விட்டன. அலங்கார இருக்கைகள் மணலுக்குள் புதைந்துள்ளன. அலங்கார ஓடுகள் சேதமடைந்துள்ளன. பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி மற்றும் குடிநீர் குழாய்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
குடிநீருக்கு திண்டாட்டம்: மேலும், பூம்புகார் படகுத் துறையில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட ஒலி, ஒளி கண்காட்சிக் கூடம் முற்றிலுமாக செயல்படவில்லை. காமராஜர் மணி மண்டபம் அருகிலுள்ள பேரூராட்சிப் பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் அதிகமாகக் கூடும் முக்கடல் சங்கமத்தில் செயற்கையாகப் போடப்பட்ட கற்கள் ஓரிடத்தில் குவிந்துள்ளதால் கடற்கரை அதன் இயற்கை அழகை இழந்துள்ளது.
முக்கடல் சங்கமம் பகுதியில் அமர்ந்து கடலின் அழகை ரசிப்பதற்காக அமைக்கப்பட்ட இருக்கைகள் அனைத்தும் சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. காந்தி மண்டபத்தின் முன் அமைந்துள்ள முக்கோணப் பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது. முக்கியப் பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் குடிநீருக்கு திண்டாடுகின்றனர். போதிய கழிப்பறைகள் மற்றும் தெருவிளக்கு வசதியும் செய்யப்படாததால் பயணிகள் மிகவும் அவதிப்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
விபத்துகளைத் தடுக்க முன்னுரிமை: இதுகுறித்து சுற்றுலா ஆர்வலரான டி.ஜாண்சேவியர்ராஜன் கூறியது:
உலகின் முக்கிய சுற்றுலாப் பகுதிகளுள் ஒன்றாக விளங்கும் கன்னியாகுமரியில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை. அதிக பொருள் செலவில் அறிவிக்கப்பட்ட திட்டங்களும் முடங்கிய நிலையில் உள்ளன. காமராஜர் மணி மண்டபத்தின் பின்பகுதியில் அமைந்துள்ள பாறையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதனை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து அங்கு அறிவிப்புப் பலகைகள் வைப்பதுடன் காவலாளிகள் நியமிக்கப்பட வேண்டும். அண்டை மாநிலமான கேரளத்தில் இருப்பதைப் போல் சுற்றுலாவுக்கென தனியாக சட்டம் இயற்றிட வேண்டும். இங்குள்ள பூங்காக்கள் அனைத்தும் பராமரித்து பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு சுற்றுலாத் துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.
அரசு ஒப்புதலுக்கு காத்திருப்பு: இதுகுறித்து மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் கூறியது: கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ரூ. 14 கோடி செலவில் தொடங்கப்பட்ட மெகா சுற்றுலாத் திட்டத்துக்கான பணிகள் முழுமை பெற்றுவிட்டன.
தற்போது, சூரிய அஸ்தமன காட்சிக் கோபுரம் தொடங்கி மணல்தேரி வரையிலான கடற்கரைப் பகுதியில் நவீன பூங்கா உருவாக்கும் திட்டம் உள்ளது. இதற்கான திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அரசு ஒப்புதல் கிடைத்ததும் கடற்கரை பூங்காவை சீரமைத்து அழகுபடுத்தும் பணி தொடங்கும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...