காளிமலையில் சித்ரா பெளர்ணமி விழா: பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு

சித்ரா பெளர்ணமியையொட்டி காளி மலையில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஞாயிற்றுக்கிழமை பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.
Updated on
1 min read

சித்ரா பெளர்ணமியையொட்டி காளி மலையில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஞாயிற்றுக்கிழமை பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.
குமரி மாவட்ட எல்லைப் பகுதியான பத்துகாணியில் வரம்பொதி, கொண்டைகட்டி,  கூனிச்சி ஆகிய மூன்று மலைகள் அடங்கிய காளிமலை உள்ளது.  கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 அடி கொண்ட இம்மலையில் காளி தேவி,  தர்மசாஸ்தா, நாக யக்ஷி ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.
இங்கு ஆண்டுதோறும் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு காளிமலை அறக்கட்டளை சார்பில் புனித யாத்திரையும், பொங்கல் வழிபாடும் நடத்தப்படுகிறது. நிகழாண்டு புனித யாத்திரை கடந்த 23ஆம் தேதி தொடங்கிய நிலையில் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை பொங்கல் வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் காலையில் சிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்து மாவட்டத்தில் 48 காணி குடியிருப்புகளில் வசிக்கும் 48 மூட்டுக்காணிகளுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. 
தொடர்ந்து வனமூதாட்டி பாலோடு பத்மஸ்ரீ கே. லட்சுமிகுட்டி அம்மா பொங்கல் அடுப்பில் நெருப்பை மூட்டி பொங்கலைத் தொடங்கிவைத்தார்.  
இதில், குமரி மாவட்டத்திலிருந்தும், கேரளத்திலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் காளி மலை உச்சிக்குச் சென்று பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.  
தேசிய கருத்தரங்கம்: பொங்கல் வழிபாட்டைத் தொடர்ந்து தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் சலீம்குமார் முன்னிலை வகித்தார். செயலர் வித்யாதரன் வரவேற்றார். 
வெள்ளி மலை இந்து தர்ம வித்யாபீட சுவாமி சைதானந்த மகராஜ் ஆசியுரை வழங்கினார். ஜெயகிருஷ்ணன் வாரியார்,  ஸ்ரீகுருமண்டலம் அறக்கட்டளை சிவசந்திரர் ஆகியோர் கருத்துரை வழங்கினர். ஆர்.எஸ்.எஸ். அகில பாரத சம்யோஜக் பிரக்ஞா பிரவாஹ்  நந்தகுமார்,  மலையாள திரைப்பட  இயக்குநர் ராஜசேனன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். அறக்கட்டளை பொருளாளர் ராஜ்குமார் நன்றி கூறினார். 
தொடர்ந்து இரவில் மகாகாளியூட்டு நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய  இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com