பிரதான அணையான பேச்சிப்பாறை அணையிலிருந்து வியாழக்கிழமை மாலையில் விநாடிக்கு 9700 கன அடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டது.
தொடர் மழை காரணமாக பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து புதன்கிழமை காலையில் விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், ஆறுகளின் கரைப்பகுதிகளான திருவட்டாறு, திக்குறிச்சி, குழித்துறை, மங்காடு, முன்சிறை, வைக்கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளிலும், விளை நிலங்களிலும் வெள்ளம் புகுந்து ஏராளான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பேச்சிப்பாறை அணையில் சீரமைப்புப் பணி காரணமாக, அதிகளவில் தண்ணீர் தேக்கப்படாத நிலையில், புதன்கிழமை காலையில் அணையிலிருந்து மறுகால் மதகுகள் வழியாக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் அதிகரித்தது.
இதனால் அணையில் கட்டுமானப் பணிகள் நடத்தப்பட்டு வரும் தற்காலிக மண் திடல்கள் மற்றும் சாலைகளை உடைத்துக் கொண்டு தண்ணீர் வெளியேறியது. அணையின் முன்பக்கம் சாய்வு அணை கட்டப்படுவதற்கு தோண்டப்பட்டுள்ள அஸ்திவாரப்பகுதிகளையும் வெள்ளம் மூழ்கடித்தது. இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் அணையிலிருந்து விநாடிக்கு 8300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மாலையில் 9700 கன அடியாக உயர்த்தப்பட்டது. அணையின் நீர்மட்டம் 38 அடியாக உயர்ந்திருந்தது.
அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டதால் கோதையாற்றில் வெள்ளம் அதிகரித்து, திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை மழையின் தாக்கம் சற்று குறைவாக இருந்ததால், பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டது.
வியாழக்கிழமை மாலை நிலவரப்படி பெருஞ்சாணி அணையிலிருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியும், சிற்றாறு அணைகளிலிருந்து விநாடிக்கு 636 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இந்த அணைகளிலிருந்து வெளியேறும் வெள்ளத்தின் அளவு குறைந்திருந்த போதும், பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேறும் வெள்ளம் அதிகரித்துள்ளதால், கோதையாறு மற்றும் தாமிரவருணியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது. மேலும், வீடுகள் மற்றும் விளை நிலங்களில் தேங்கிய வெள்ளம் வடியாமல் உள்ளது.