11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில்  அதிநவீன முறையில் சிறுநீரக அறுவை சிகிச்சை: மருத்துவக் கல்லூரி முதன்மையர் தகவல்

கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக குழாய் அடைப்பு ஏற்பட்ட 2 நோயாளிகளுக்கு அதிநவீன

Updated On :25 ஜூலை 2018, 5:40 am IST

கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக குழாய் அடைப்பு ஏற்பட்ட 2 நோயாளிகளுக்கு அதிநவீன முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றார் மருத்துவக் கல்லூரி முதன்மையர் ராதாகிருஷ்ணன்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு அறுவை சிகிச்சைப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது சிறுநீரகப் பிரிவில்  உள்ள மருத்துவர்கள் சிறுநீரகக் குழாய் அடைப்பு ஏற்பட்ட  நோயாளிக்கு அதிநவீன கருவிகள் மூலம் செயற்கை குழாயை தோல் மூலம் செலுத்தி அறுவை சிகிச்சை மேற்கொண்டு சாதனை நிகழ்த்தியுள்ளனர். 
பொதுவாக சிறுநீரகப் பாதை அடைப்புக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சிறுநீரகக் குழாய் சுருங்குவதால் நோயாளிக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. சிறுநீர் குழாயில் அடிபட்டால் குழாய் சுருங்கலாம், பால்வினை நோய்களால் சிறுநீர் குழாய் சுருக்கம் ஏற்படலாம். இதனால்,  நோயாளிகள் சாதாரணமாக சிறுநீர் கழிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுவார்கள். இதற்கு முன்பு வயிற்றில் துளையிட்டு குழாயை செலுத்தி சிறுநீரை வெளியேற்ற வேண்டிய நிலை இருந்தது.
ஆனால் தற்போது,  பிசிஎன்எல் எனப்படும் அதிநவீன முறையின் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமலேயே  சிறுநீரகத்துக்கு அருகில் தோல் மூலம் துளையிட்டு நேரடியாக சிறுநீரகத்துக்குள் குழாயை செலுத்தி நெப்ரோஸ்கோப் மூலம்,  சிறுநீரக கற்களை உடைக்கலாம். மேலும், நோயாளியின் தொண்டை சதையை எடுத்து அதைப் பயன்படுத்தி,  செயற்கை குழாய் தயாரித்து அதனை சிறுநீரகக் குழாய் சுருங்கிய நோயாளிகளுக்கு பொருத்தலாம்.  இந்த நவீன முறை அறுவை சிகிச்சைக்குத் தேவையான ரூ. 50 லட்சம் மதிப்பிலான சி ஆர்ம், நெப்ரோஸ்கோப், கேமரா, மானிட்டர்  உள்ளிட்ட கருவிகள் தற்போது ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் உள்ளன.
குமரி மாவட்டம், செண்பகராமன்புதூரைச் சேர்ந்த  கூலித் தொழிலாளி தட்சணாமூர்த்தி (53). இவருக்கு சிறுநீரக கல் அடைப்பு  நோய் பாதிப்பு இருந்தது. இதற்கு அறுவை சிகிச்சை செய்தால் 6 மாதங்கள் வரை அவர் ஓய்வில் இருக்க வேண்டும். தற்போது நவீன சிகிச்சை முறையில் சீயான் என்ற கருவி மூலம் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு கற்கள் உடைக்கப்பட்டது. அவர் பூரண குணமடைந்து தற்போது தனது அன்றாடப் பணிகளை  மேற்கொண்டு வருகிறார்.
இதே போல் கன்னியாகுமரி அருகேயுள்ள கோவளத்தைச் சேர்ந்த கின்ஸ்டின் (37) என்ற மீனவத் தொழிலாளி  8  ஆண்டுகளாக சிறுநீரக குழாய் சுருக்கத்தினால் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு பிசிஎன்எல்  என்ற அதிநவீன முறையில், அவரது தொண்டை சதையில் இருந்து உருவாக்கப்பட்ட  செயற்கை குழாய் பொருத்தப்பட்டது. தற்போது அவர் எந்த பிரச்னையும் இல்லாமல் நலமாக வாழ்ந்து வருகிறார்.  
மேலும் இந்த நவீன சிகிச்சை முறையில் நோயாளி  2 நாள்களில் தனது அன்றாட பணிகளை மேற்கொள்ளலாம். வலி இருக்காது. ரத்தம் வீணாவது தடுக்கப்படுகிறது.
இந்த அதிநவீன அறுவை சிகிச்சையை மருத்துவர்கள்  எஸ்.ஆர். கண்ணன் தலைமையில், மருத்துவர்கள் பிராங்க்டேவிட் டேனியல், செல்வகுமார்,  மயக்கவியல் நிபுணர் ரவீந்திரன் கொண்ட குழுவினர் மேற்கொண்டனர்.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இதற்காக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தபின்னர் நோயாளிகளை பாதுகாப்பதற்கான சிறப்பு  பிரிவு ரூ. 4 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.  
மருத்துவமனையில், அமைக்கப்பட்டுள்ள இந்த வசதிகள் குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து சென்றுள்ளனர்.  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மையம் அமைப்பதற்கு அரசுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
பேட்டியின்போது, இருப்பிட மருத்துவர் ஆறுமுகவேலன், துணை இருப்பிட மருத்துவர்கள் ரெனிமோள், கலைகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.