சேவை மையங்கள் மூலம் 17 நாள்களில் பாஸ்போர்ட் பெறலாம்: மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தகவல்

அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் மூலம் விண்ணப்பித்த 17 நாள்களுக்குள் பாஸ்போர்ட் பெறலாம் என்றார் மதுரை மண்டல பாஸ்போர்ட் தலைமை அதிகாரி டி.அருண் பிரசாத்.
Updated on
1 min read

அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் மூலம் விண்ணப்பித்த 17 நாள்களுக்குள் பாஸ்போர்ட் பெறலாம் என்றார் மதுரை மண்டல பாஸ்போர்ட் தலைமை அதிகாரி டி.அருண் பிரசாத்.
நாகர்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மைய  திறப்பு விழாவில்  கலந்துகொண்டு அவர் மேலும் பேசியது:
பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறையில், மத்திய அரசு கடந்த 2010  ஆம் ஆண்டு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது.  அதாவது, நாடு முழுவதும் "பாஸ்போர்ட் சேவா கேந்திரா" என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், அஞ்சல் துறையுடன் இணைந்து பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டன.  இதன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், அதிக நேரம் காத்திருக்காமல் எளிதாக, விரைவாக பாஸ்போர்ட் விண்ணப்ப நடைமுறைகளை முடிக்கும் வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்தத் திட்டத்தில், தமிழகத்தில் 11 அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்படவுள்ளன.  இதில்,  மதுரை மண்டலத்தில் 5 மையங்களும்,  இந்தியா முழுவதும் 251 மையங்களும் திறக்கப்படவுள்ளன.
இந்தியாவில் பிப்.27 ஆம் தேதி வரை 100 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது நாகர்கோவிலில் திறக்கப்பட்ட இந்த மையத்தில் முதல் கட்டமாக நாளொன்றுக்கு 50 பேர் பாஸ்போர்ட்  பெற விண்ணப்பிக்க முடியும்.  இனிமேல் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசிப்பவர்கள் திருநெல்வேலி,  மதுரைக்கு சென்று பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.  இதில்,  எல்லா நடைமுறைகளும் முடிந்து, அதிகபட்சம் 17 நாள்களுக்குள் பாஸ்போர்ட் பெற முடியும் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில், தென் மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஆர்.ஆனந்த் பேசியதாவது:  இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது.  முதல் கட்டமாக,  சேலம்,  வேலூரில் தொடங்கப்பட்டது.  கடந்த ஓராண்டில் சேலத்தில் தொடங்கப்பட்ட அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தில் 19 ஆயிரத்து 500 பேரும், வேலூரில் 15 ஆயிரம் பேரும்,   ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட காரைக்கால் சேவை மையத்தில் 500 பேரும் விண்ணப்பித்து பயன் பெற்றுள்ளனர்.
சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரத்தில் சேவை மையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.  ஆண்டுக்கு 1  கோடி பேருக்கு பாஸ்போர்ட்டை  விரைவு அஞ்சல் மூலம் அஞ்சல் துறை விநியோகம் செய்கிறது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com