எங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்!ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 1,600 குறைந்தது!உத்தரப் பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து2025-ல் சமூக வலைதளங்கள் மூலம் ரூ. 1.89 லட்சம் கோடி மோசடி!உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டு
/

குமரி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலால் சிகிச்சை பெற்றவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பொதுமக்கள்

Updated On :22 அக்டோபர் 2018, 7:55 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலால் சிகிச்சை பெற்றவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் 7 பேர் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருந்து வருவதை தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே மாவட்டம் முழுவதும் கிராம, நகரப் பகுதிகளில் பன்றிக் காய்ச்சல், டெங்கு தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து காய்ச்சல், இருமல், சளி, மூச்சு இழுப்பு போன்ற அறிகுறிகளுடன் வருவோரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் மர்மக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், டெங்கு போன்றவை குறித்த அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக சுகாதாரத் துறைக்கு தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் வருகைப் பதிவேடு மற்றும் காய்ச்சல் வந்த குழந்தைகள் குறித்த தகவலை தெரிவிக்குமாறு பள்ளி நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு வயது குழந்தை உள்பட 3 பேர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் நாகர்கோவில் சற்குணவீதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியையான தெரேசா ஜோஸ்பின்ராணி ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் அரசு, மற்றும் தனியார் மருத்துவமனையில் தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த மருத்துவ அறிக்கை மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து குமரி மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மதுசூதனன் கூறியது: குமரி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவக் குழுவினர் கிராமங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பன்றிக் காய்ச்சலுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தெரேசா ஜோஸ்பின் ராணி உயிரிழந்துள்ளார். அதேநேரம் அங்கு பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவரில் ஒரு வயது குழந்தை பூரண குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளது.
குமரி மாவட்டத்தைப் பொருத்தவரை தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருவரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் என மொத்தம் 7 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு பாதிப்பு இல்லை. டெங்குவை பொருத்தவரை மாதம்தோறும் 10 பேர் வரை பாதிப்புக்குள்ளாகி வந்தனர். ஆனால், இந்த மாதம் 2 பேருக்கு மட்டுமே டெங்கு அறிகுறி தென்பட்டது. அவர்களும் குணமடைந்துள்ளனர். 
பன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் பீதியடையவேண்டாம். சாதாரண காய்ச்சல் வந்தாலும் அலட்சியம் காட்டாமல் பக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.