குமரி மாவட்ட ரயில் தடங்கள் மதுரை கோட்டத்துடன் இணைக்கப்படுமா?  பயணிகள் எதிர்பார்ப்பு

நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள இரட்டை ரயில்பாதை திட்ட அடிக்கல் நாட்டு விழாவில், கன்னியாகுமரி மாவட்ட

நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள இரட்டை ரயில்பாதை திட்ட அடிக்கல் நாட்டு விழாவில், கன்னியாகுமரி மாவட்ட ரயில் வழித்தடங்கள் மதுரை கோட்டத்துடன் இணைப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு இம்மாவட்ட ரயில் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் 1956ஆம் ஆண்டு கேரளத்திலிருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைந்தது. இருப்பினும் இம்மாவட்ட மக்கள் தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு தற்போதும் கேரள மாநிலத்தை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. 
இதே போன்று ரயில் சேவையிலும் குமரி மாவட்டம் கேரளத்தின் திருவனந்தபுரம் கோட்டத்தை சார்ந்து இருக்க வேண்டியுள்ளதால், இம்மாவட்ட மக்கள் பல்வேறு வகைகளில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக குமரி மாவட்ட ரயில் நிலையங்களில் போதிய வசதிகள் செய்யாமல் புறக்கணிப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதே போன்று குமரி மாவட்டத்திலிருந்து புறப்படும் ரயில்கள் அனைத்தும் இம்மாவட்ட மக்களின் பயன்பாட்டை நிராகரித்து, கேரள பயணிகளின் வசதியை மையமாக வைத்து பட்டியலிடப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம் ரயில் கோட்டம்: திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் 1979 அக். 2ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது. தற்போது இக் கோட்டத்தில் 624.730 கி.மீ. தொலைவுக்கு வழித்தடங்கள் உள்ளன. இதில், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் 161 கி.மீ. தொலைவு வழித்தடமும் உள்ளது.
மேலும், குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி,  நாகர்கோவில் சந்திப்பு, நாகர்கோவில் டவுன், குழித்துறை, குழித்துறை மேற்கு, இரணியல், ஆரல்வாய்மொழி, பள்ளியாடி, வீராணி ஆளூர் என 9 ரயில் நிலையங்களும், திருநெல்வேலி மாவட்டத்தின் மேலப்பாளையம், வள்ளியூர்,  நாங்குனேரி, செங்குளம், பணகுடி உள்ளிட்ட ரயில் நிலையங்களும் திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. 
இந்த 14 ரயில் நிலையங்களிலும் சேர்த்து கடந்த 2016-17 நிதியாண்டில் மொத்த ஆண்டு வருவாய் ரூ. 72 கோடியே 32 லட்சத்து 49 ஆயிரத்து 181 என புள்ளிவிவரம் கூறுகிறது. திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வரும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட பகுதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதுடன், வருமானத்துக்கு ஏற்ப பயணிகளுக்கு வசதிகள் ஏற்படுத்தப்படுவதில்லை.
இரவு நேர ரயில்கள்: குமரி மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் ரயில்கள் இம்மாவட்ட பயணிகளுக்கு பயன்படாதவாறு அவை இரவு நேரத்தில் புறப்பட்டு செல்லும் வகையில் கால அட்டவணை அமைந்துள்ளது. இந்த வகையில் திருநெல்வேலி- பிலாஸ்பூர், நாகர்கோவில் - மங்களூர் ஏரநாடு ரயில் உள்ளிட்டவை இரவு நேரம் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களின் கால அட்டவணையை மாற்றம் செய்து இயக்க வேண்டும் என்பது இம்மாவட்ட பயணிகளின் நீண்ட கால கோரிக்கையாகும்.
ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் கேரளத்துக்கு என 5 முதல் 10 ரயில்கள் வரை அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உள்பட்ட கன்னியாகுமரியிலிருந்து ஆண்டுக்கு ஒரு ரயில் வீதம் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை கூட கோட்ட அதிகாரிகளால் மறுக்கப்பட்டு வருகிறது.
ரயில்களை நீட்டிக்க மறுக்கும் அதிகாரிகள்: திருவனந்தபுரத்திலிருந்து நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் நெடுந்தூர ரயில் வசதிகள் உள்ளன. திருவனந்தபுரத்திலிருந்து மங்களூருக்கு மாலை நேரத்தில் இயக்கப்படும் 3 ரயில்களில் ஏதேனும் ஒரு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்வதற்கு கோட்ட அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் மற்றும் கர்நாடகத்திலிருந்து இயக்கப்பட்ட மங்களூரு - புதுதில்லி ரயில் கேரளத்தின் எர்ணாகுளம் வரையிலும், மங்களூரு - பெங்களூரு ரயில் கண்ணூர் வரையிலும், கோயம்புத்தூர் - பெங்களூரு பகல்நேர ரயில் எர்ணாகுளம் வரையிலும், சென்னை - கோயம்புத்தூர் ரயில் கேரளம் வழியாக மங்களூரு வரையிலும் கேரள பயணிகள் வசதிக்காக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கச் செயலர் பி. எட்வர்ட் ஜெனி கூறியது: நாட்டின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியிலிருந்து இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரயில் இயக்கப்படுவதுடன், கன்னியாகுமரி ரயில் நிலையத்தை புதிய ரயில் முனையமாக மாற்றி புதிதாக மூன்று பிட்லைன்களும், சுமார் 10 காலி ரயில்பெட்டிகள் நிறுத்தி வைக்கும் ஸ்டேபிளிங் லைன்களும் அமைக்க வேண்டும். இந்த வசதி அமைந்தால் இங்கிருந்து அனைத்து மாநில தலைநகரங்களுக்கும் புதிய தினசரி ரயில்களை இயக்க முடியும். 
குமரி மாவட்டத்தில் ஏற்கெனவே மூடப்பட்ட அகஸ்தீசுவரம், தாமரைகுளம்,  சுசீந்திரம், தோவாளை ரயில் நிலையங்களையும், திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்கிணறு,  தளபதிசமுத்திரம், பானங்குளம் ஆகிய ரயில் நிலையங்களையும் திறக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் பார்வதிபுரம், தெங்கன்குழி, ஒழுகினசேரி ஆகிய இடங்களில் புதிய ரயில் நிலையங்கள் அமைக்க வேண்டும். 
நாகர்கோவில் துணை கோட்டத்தின் கீழ் கன்னியாகுமரி - திருவனந்தபுரம் வழித்தடம் 87 கி.மீ. மற்றும் நாகர்கோவில் - திருநெல்வேலி வழித்தடம் 74 கி.மீ. என மொத்தம் 161 கி.மீ. உள்ளது.  இந்த ரயில்வே இருப்பு பாதைகளை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்றார் அவர். 
இதற்கான அறிவிப்பை, இரட்டை ரயில்பாதைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் துறை அமைச்சர்கள் அறிவிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு இம்மாவட்ட ரயில் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com