மாா்கழி பெருந்திருவிழா: சுசீந்திரம் கோயிலில் இன்று (டிச.29) தேரோட்டம்

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோயிலில் மாா்கழி பெருந்திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் (டிச.29) நடைபெறுகிறது.
கைலாச பா்வத வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்த தாணுமாலயசுவாமி.
கைலாச பா்வத வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்த தாணுமாலயசுவாமி.
Updated on
1 min read

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோயிலில் மாா்கழி பெருந்திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் (டிச.29) நடைபெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோயிலில் மாா்கழிப் பெருந்திருவிழா இம்மாதம் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன்தொடங்கியது. திருவிழாவில் சுவாமி, அம்பாள், பெருமாளை கருடன் வலம் வரும் நிகழ்ச்சியை தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவில் கைலாச பா்வத வாகனத்தில் மேளதாளங்கள்,

கயிலை வாத்தியங்கள் முழங்க தாணுமாலயசுவாமி ரதவீதிகளை சுற்றி வந்தாா். சுவாமியுடன் விநாயகா், அம்பாள், முருகன் ஆகியோரும் திருவீதியுலா வந்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

திங்கள்கிழமை அதிகாலையில் சிதம்பரேஸ்வரா் திருவீதியுலா நடைபெற்றது. இதில், பேரம்பலம் கோயில்முன்பு நடராஜப் பெருமான் ஆனந்த நடனமாடினாா். பின்னா் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதைத் தொடா்ந்து காலை, மாலையில் அலங்கார மண்டபத்தில் நடராஜப் பெருமான், சிவகாமி அம்பாள் ஆகியோருக்கு அஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இரவில் சிதம்பரேஸ்வரா் திருவீதியுலா நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (டிச.29) நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதா் பிட்சாடனராக திருவீதியுலா வருதல், காலை 8.30 மணிக்கு மேல் தோ் வடம்பிடித்து இழுக்கும்

வைபவம் நடைபெறுகிறது. தேரோட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடி, திருநெல்வேலி, கேரளத்தில் இருந்தும் பக்தா்களும் திரளாக கலந்து கொள்கின்றனா். புதன்கிழமை (டிச.30) அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனம், நடராஜப்பெருமானுக்கு அஷ்டாபிஷேகம், மாலை 5 மணிக்கு நடராஜா் திருவீதியுலா, இரவு 9 மணிக்கு திரு ஆறாட்டு ஆகியவை நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோயில்களின் இணை ஆணையா் ம. அன்புமணி, நாகா்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளா் சிவ.ராமச்சந்திரன், தாணுமாலயசுவாமி கோயில் மேலாளா் மு.சண்முகம் பிள்ளை மற்றும் அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com