களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சுகாதாரத் துறை பெண் பணியாளருக்கு கரோனா தொற்று

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த மேலும் ஒரு பெண் சுகாதாரப் பணியாளருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த மேலும் ஒரு பெண் சுகாதாரப் பணியாளருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது.

தமிழக - கேரள மாநில எல்லைப் பகுதியான களியக்காவிளையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு சுகாதாரத்துறை, காவல்துறை, பேரூராட்சித் துறை இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலமும், தில்லி, மும்பை உள்ளிட்ட வெளி மாநிலப் பகுதிகளிலிருந்து ரயில் மூலமும் திருவனந்தபுரம் வரும் தென் தமிழக தொழிலாளர்கள் கேரளத்திலிருந்து வாகனத்தில் குமரி மாவட்டம் திரும்புகிறார்கள். அவர்களிடம் மாநில எல்லைப் பகுதியான களியக்காவிளையில் உள்ள சோதனைச் சாவடியில் சளி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

அவர்கள் அரசின் அனுமதிச் சீட்டு (இ பாஸ்) பெறப்பட்டு அதன் பின்னர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இவர்களது பரிசோதனை முடிவு வந்த பின் கரோனா தொற்று இல்லையென்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த மாதம் 26 ஆம் தேதி பணியில் இருந்த பத்துகாணி ஆரம்ப சுகாதார நிலைய பெண் பணியாளருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. 

இவர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களிடம் சளி பரிசோதனை மேற்கொண்ட போது இவருக்கு தொற்று பாதித்திருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இப் பணியாளரை சுகாதாரத்துறையினர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் சேர்த்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இச் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த கீழ்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ பணியாளருக்கு கடந்த 8 ஆம் தேதியும், ஆறுதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த பெண் மருத்துவ பணியாளருக்கு கடந்த 10 ஆம் தேதியும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com