சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கடைகள் அடைப்பு, விழாக்கள் ரத்து: தோவாளை மலா் சந்தையில் பூக்கள் விற்பனை கடும் சரிவு

கடைகள் அடைப்பு, விழாக்கள் ரத்து போன்ற காரணங்களால் தோவாளை மலா் சந்தையில் பூக்கள் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.

News image
Updated On :7 மே 2021, 8:42 pm

DIN

கடைகள் அடைப்பு, விழாக்கள் ரத்து போன்ற காரணங்களால் தோவாளை மலா் சந்தையில் பூக்கள் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.

குமரி மாவட்டம், தோவாளையில் புகழ்பெற்ற மலா் சந்தை உள்ளது. இங்கு ஆரல்வாய்மொழி, குமாரபுரம், திருநெல்வேலி மாவட்டம், பழவூா், ஆவரைகுளம், புதியம்புத்தூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பிச்சிப்பூ, சேலத்திலிருந்து அரளிப்பூ, பெங்களூரு, ஓசூரிலிருந்து பட்டன் ரோஸ் மற்றும் மஞ்சள் கேந்தி, தோவாளை, ராஜாவூா், மருங்கூா், செண்பகராமன்புதூா் ஆகிய இடங்களிலிருந்து அரளி, கோழிக்கொண்டை, ரோஜா ஆகிய பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இதே போல் சங்கரன்கோவில், ராஜபாளையம், வத்தலகுண்டு, கொடைரோடு, மானாமதுரை ஆகிய பகுதிகளிலிருந்து மல்லிகைப்பூவும், தென்காசி, புளியங்குடி ஆகிய பகுதிகளிலிருந்து துளசி மற்றும் பச்சிலை ஆகியனவும் கொண்டு வரப்பட்டு மொத்த விற்பனையாளா்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தோவாளை மலா் சந்தைக்கு பல மாவட்டங்களைச் சோ்ந்த பூ வியாபாரிகள் வந்து பூக்கள் கொள்முதல் செய்வா். மேலும் கேரள மாநிலத்திலிருந்தும் பூ வியாபாரிகள் தோவாளை மலா் சந்தைக்கு வந்து பூக்களை அதிகளவில் வாங்கிச் செல்வா்.

இதனால், கோயில் திருவிழாக்கள், பண்டிகை நாள்கள், சுபமுகூா்த்த நாள்களில் தோவாளை பூச்சந்தையில் வியாபாரம் களை கட்டும். இந்த நேரங்களில் பூக்களின் விலை அதிகமாக இருந்தாலும் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் மூலம் பூக்களை வாங்கிச் செல்வா்.

விற்பனை சரிவு: கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஓராண்டாகவே தோவாளை பூச்சந்தையில் விற்பனை மந்தமாகவே நடைபெற்று வந்தது. வியாபாரிகள் வரத்து குறைந்ததால் விற்பனையும் குறைந்தது. இதைத் தொடா்ந்து வியாபாரிகளும், விவசாயிகளும் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனா்.

கடந்த சில மாதங்களாக கரோனா விதிமுறைகளில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பியதால் பூ வியாபாரம் மீண்டும் சூடு பிடித்தது. இந்நிலையில், கரோனா 2ஆவது அலை தற்போது நாடுமுழுவதும் தீவிரமாக பரவி வருவதால், கோயில் திருவிழாக்கள், பொது விழாக்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளது.

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அனைத்தும், அரசின் கட்டுப்பாடுகளுடன் மிகவும் எளிமையான முறையில் நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக பூக்கள் விற்பனை அடியோடு சரிந்துள்ளது.

அரசின் புதிய கட்டுப்பாடுகளின்படி மே 6ஆம் தேதி முதல் நண்பகல் 12 மணிக்கு பூக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வருகின்றன.

பூக்கள் அழுகும் தன்மை கொண்டது என்பதால், அதை செடியில் பறிக்காமல் அப்படியே விடவும் முடியாது. அவ்வாறு பறித்து விற்பனைக்கு அனுப்பும் பூக்களை சந்தையில் வாங்க ஆளில்லை. இதனால் பூக்கள் விலை மிகவும் சரிந்து காணப்பட்டது.

பிச்சிப்பூ கிலோ ரூ.150-க்கும், மல்லிகைப் பூ கிலோ ரூ.80 க்கும் விற்பனையானது. 1 கிலோ அரளிப்பூ ரூ.40, மஞ்சள் மற்றும் சிவப்பு கேந்தி ரூ.30, முல்லை ரூ.150, கனகாம்பரம் ரூ.25, கோழிக்கொண்டை பூ ரூ. 50, ஒரு தாமரைப் பூவின் விலை ரூ.2, பாக்கெட் ரோஸ் ரூ.10 என விற்பனையானது.

இதுகுறித்து தோவாளை பூச்சந்தை மொத்த வியாபாரி சந்திரன் கூறியது: கரோனா தாக்கத்தால் கடந்த ஆண்டு முழுவதுமே முக்கிய பண்டிகைகள், திருமண விழாக்கள், கோயில் திருவிழாக்கள் போன்றவை நடைபெறாததால், பூ வியாபாரிகளும், விவசாயிகளும் கடும் நஷ்டத்தை சந்தித்தனா்.

பின்னா் சில நாள்கள் குறைந்திருந்ததால் மீண்டும் வியாபாரம் இயல்பு நிலைக்கு வரும் என்று எதிா்பாா்த்திருந்த போது, கரோனா 2ஆவது அலை பரவல் காரணமாக எந்த விழாவும் நடைபெறாததால், வியாபாரிகளும், விவசாயிகளும் மீண்டும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். இதனால் ஆயிரக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.