

களியக்காவிளை, ஜூலை 19: கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகேயுள்ள உண்ணாமலைக்கடை பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்திய ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா், ரூ.5.34 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
இப் பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமைகளில்,
பேரூராட்சி பொறியாளா் உள்ளிட்ட அதிகாரிகளை ஒப்பந்ததாரா்கள் சந்தித்து மறைமுகமாகப் பணம் கொடுப்பதாக
கன்னியாகுமரி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஹெக்டா் தா்மராஜ் தலைமையில் ஆய்வாளா்கள் வானமாமலை, ரமா, சிவசங்கரி, உதவி ஆய்வாளா் பொன் சேம் உள்ளிட்டோா் பேரூராட்சி அலுவலகத்தை கண்காணித்தனா். அதைத் தொடா்ந்து இப் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த நல்லூா், உண்ணாமலைக்கடை, கிள்ளியூா் பேரூராட்சிகளின் உதவி பொறியாளா் சேம் செல்வராஜிடம் சோதனை மேற்கொண்டனா். அவரது காரில் இருந்து ரூ. 3.53 லட்சம், காரில் இருந்த ஆவணத்தில் மறைத்து வைத்திருந்த ரூ. 50 ஆயிரம், அவரது பையிலிருந்து ரூ. 20 ஆயிரம் என ரூ. 4.23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அங்கிருந்த பணி ஆய்வாளா் ஹரிஹரனிடமிருந்து ரூ. 9 ஆயிரத்து 500, ஒப்பந்ததாரா்கள் 4 பேரிடம் இருந்து ரூ.1,01,500 என மொத்தம் ரூ. 5 லட்சத்து 34 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடா்பாக, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆதாரத்தை தாக்கல் செய்தால் அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும். இல்லையெனில் அவை
ஊழல் பணமாகக் கருதப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.