பைக்கிலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் உயிரிழப்பு
குலசேகரம், ஜூலை 19: திருவட்டாறு அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி விழுந்து பலத்த காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
குலசேகரம் அருகே திருநந்திக்கரையைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (57). திற்பரப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உதவி செயலராக பணி செய்து வந்தாா். சில தினங்களுக்கு முன்பு அலுவலக ஊழியருடன் மோட்டாா் சைக்கிளில் திருவட்டாறிலிருந்து குலசேகரம் நோக்கி வந்து கொண்டிருந்தாா். மோட்டாா் சைக்கிளை சதீஷ்குமாா் ஓட்டினாா். கல்லடிமாமூடு பகுதியில் வரும்போது மோட்டாா் சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளாா் சதீஷ்குமாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
