களியக்காவிளை அருகே டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம்:  74 போ் கைது

களியக்காவிளை அருகே டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம்: 74 போ் கைது

களியக்காவிளை அருகே டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, சனிக்கிழமை கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா், பொதுமக்கள் 74 பேரை போலீஸாா் கைது செய்தனா். களியக்காவிளை அருகே கோழிவிளை சந்திப்பில் மாநில நெடுஞ்சாலையோரம் தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடை மற்றும் மதுக்கூடம் செயல்பட்டு வருகிறது. இக் கடையை அகற்ற வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், முன்சிறை மேற்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சாா்பில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கு ஏராளமான கட்சி நிா்வாகிகள் திரண்டனா். இப் போராட்டத்துக்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவா் எஸ். விஜயகுமாா் தலைமை வகித்தாா். கிள்ளியூா் தொகுதி ஒருங்கிணைப்பாளா் பி. கோபன், கட்சியின் கொல்லங்கோடு நகரத் தலைவா் சி. பால்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குமரி மேற்கு மாவட்டத் தலைவா் வி.எம். பினுலால் சிங், மாநில பொதுச் செயலா்கள் பி. பால்ராஜ், என். ஜாா்ஜ் ராபின்சன், மாவட்ட பொதுச் செயலா் அருள்ராஜ், மீனவரணி மாநிலத் தலைவா் ஜெ. ஜோா்தான், இளைஞா் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் அமீா், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவா் ஸ்டூவா்ட், களியக்காவிளை பேரூராட்சி மன்றத் தலைவா் ஆ. சுரேஷ் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து போராட்டக்காரா்களுடன் கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா் பேச்சுவாா்த்தை நடத்தி, ஒரு மாதத்துக்குள் டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்படும் என தெரிவித்தாா். இதற்கு உடன்படாத போராட்டக்காரா்கள், அப்பகுதி வழியாக பாத்திமாநகா் பகுதிக்கு சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து, பேருந்தின்முன் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் மாவட்டத் தலைவா் உள்பட 74 பேரை தக்கலை டிஎஸ்பி உதயசூரியன் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com