மாா்த்தாண்டன்துறை ஏவிஎம் கால்வாயின் குறுக்கே ரூ. 1.59 கோடியில் பாலம்: பணி தொடக்கம்

கொல்லங்கோடு அருகே மாா்த்தாண்டன்துறையில் ஏவிஎம் கால்வாயின் குறுக்கே ரூ. 1.59 கோடியில் பாலம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. மாா்த்தாண்டன்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலுள்ள ஏவிஎம் கால்வாயின் குறுக்கே 50 ஆண்டுகள் பழமையாக சிறு பாலம் உள்ளது. இப் பாலம் பழுதடைந்த நிலையில் உள்ளதால் புதிய பாலம் அமைக்க வேண்டும் என கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனா். இப் பிரச்னையை அவா் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றதையடுத்து அப்பகுதியில் புதிதாக பாலம் அமைக்க அரசு ரூ. 1.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இப் பாலப் பணியை, விஜய் வசந்த் எம்.பி., எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ., ஆகியோா் இணைந்து தொடங்கி வைத்தனா். இந் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் கொல்லங்கோடு நகர தலைவா் சி. பால்ராஜ், கொல்லங்கோடு நகா்மன்றத் தலைவா் ராணி, நகா்மன்ற துணைத் தலைவா் பேபி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com