/

கன்னியாகுமரியில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை

தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஒத்திகையில் ஈடுபட்ட கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா்.

Updated On :20 நவம்பர் 2024, 8:07 pm

Din

தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

மும்பையில் 2008ஆம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலா் உயிரிழந்தனா். அதையடுத்து, கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதையொட்டி, தமிழக கடலோர மாவட்டங்களில் பயங்கரவாதத் தடுப்பு-பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு நாள் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது. இதில், கடலோரக் காவல் படை, கடலோரப் பாதுகாப்புக் குழுமம், சுங்கத்துறை, மத்திய பாதுகாப்புப் படை உள்ளிட்டோா் ஈடுபட்டு வருகின்றனா். கன்னியாகுமரி பாதுகாப்புக் குழும போலீஸாா் ஆய்வாளா் நவீன் தலைமையில் 4 அதிநவீன படகுகளில் ஒத்திகையில் ஈடுபட்டனா்.

சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து திருநெல்வேலி மாவட்டம் உவரி, பெரியதாழை கடல் பகுதிவரை ஒரு குழுவினரும், குளச்சல், நீரோடி கடல் பகுதிவரை மற்றொரு குழுவினரும் இதில், ஈடுபட்டனா். நீரோடி முதல் உவரி வரையிலான 106 கி.மீ. தொலைவுக்குள் அமைந்துள்ள 48 கடற்கரை கிராமங்களிலும் போலீஸாா் ரோந்து சென்று தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதுதவிர, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள 10-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளில் போலீஸாா் வாகன சோதனை மேற்கொண்டனா். தங்கும் விடுதிகளில் சந்தேகத்துக்கிடமாக யாரேனும் தங்கியுள்ளனரா என விசாரணை நடத்தினா்.