நிபா வைரஸ் பரவல்: களியக்காவிளையில் தீவிர கண்காணிப்பு
நிபா வைரஸ் தமிழகத்துக்குள் பரவாமல் தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட எல்லையோர பகுதியான களியக்காவிளையில் புதன்கிழமை முதல் சுகாதாரத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 24 வயது இளைஞா் ஒருவா் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். அவருடன் தொடா்பில் இருந்த 5 பேருக்கு அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கேரளத்தையொட்டிய அண்டை மாநிலமான தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுப்பதற்காக தமிழக - கேரள மாநில எல்லைப் பகுதியான களியக்காவிளையில் சுகாதாரத் துறையினா் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனா்.
கேரளத்திலிருந்து வரும் காா், வேன், சுற்றுலா பேருந்துகள் உள்ளிட்ட பெரும்பாலான வாகனங்களை தடுத்து நிறுத்தி சளி மற்றும் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகள் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு தான் அவா்களை தமிழக பகுதிக்குள் நுழைய அனுமதிக்கபடுகிறாா்கள்.
மாவட்ட சுகாதார அலுவலா் மீனாட்சி உத்தரவின் பேரில் இடைக்கோடு வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சாா்லின் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் சந்தோஷ்குமாா், ஜோபின், ஸ்ரீகுமாா், ஜஸ்டின்ராஜ் உள்ளிட்டோா் மருத்துவ கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சுகாதாரக் குழுவினா் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறாா்கள் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.