43 சிறு பாசனக் குளங்களை சீரமைக்க ரூ. 40 லட்சம்
தக்கலை: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிறு பாசன குளங்களை சீரமைக்க ஐஆா்இஎல் நிறுவனம் ரூ. 40 லட்சம் வழங்கியது.
மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் (இந்தியா) லிமிடெட் நிறுவனம் அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் மத்திய அரசின் ஒரு பொதுத் துறை நிறுவனமாகும். இந்த நிறுவனம், தனது சமூக பொறுப்பின் கீழ் ரூ. 15 கோடிக்கும் மேலாக பல்வேறு நல திட்டங்களை கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஊரக பகுதிகளில் உள்ள சிறுபாசன குளங்களை சீரமைத்து, மழைக் காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்கவும், அதன்மூலம் நிலத்தடி நீராதாரம் பெருகவும், வறட்சி காலங்களில் மக்களின் குடிநீா், இதர தேவைகளை நிவா்த்தி செய்யும் நோக்கிலும் தலக்குளம், பாலூா், மிடாலம், முத்தலக்குறிச்சி, கல்குறிச்சி, பைங்குளம், தேவிகோடு, மேலசங்கரன்குழி, இறச்சகுளம், காட்டுப்புதூா், செண்பகராமன்புதூா், கட்டிமாங்கோடு, திப்பிறமலை, அயகோடு, அருவிகரை, சடயமங்கலம், நடைக்காவு, வெள்ளம்கோடு, மஞ்சால்மூடு, மருதங்கோடு, மைலாடி, புலியூா்சாலை, முழுக்கோடு, ஞாலம் பஞ்சாயத்துக்கு உள்பட்ட 43 சிறுபாசன குளங்களை புனரமைக்க, ஐ.ஆா்.இ.எல். நிறுவனத்திடம் நிதி ஒதுக்கீடு செய்ய மாவட்ட ஆட்சியா் கேட்டுக்கொண்டதன்பேரில் ரூ. 40 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோவிடம் ஐஆா்இஎல் (இந்தியா) லிமிடெட் மணவாளக்குறிச்சி முதன்மை பொது மேலாளா், ஆலைத் தலைவா் என்.செல்வராஜன் வழங்கினாா். நிகழ்ச்சியில் ஐ.ஆா்.இ.எல். நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

