கன்னியாகுமரி மாவட்டத்தில் 1.53 லட்சம் போ் நீக்கம்

Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டதில், 1 லட்சத்து 53 ஆயிரத்து 373 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக கு கூட்ட அரங்கில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.அழகுமீனா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சிறப்பு தீவிர திருத்த வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த அக்.27இல் வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலின்படி, கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில், 3 ,02,250 வாக்காளா்கள், நாகா்கோவில் தொகுதியில், 2, 71,185 வாக்காளா்கள், குளச்சல் தொகுதியில் 2,76, 754 வாக்காளா்கள், பத்மநாபபுரம் தொகுதியில் 2,45,824 வாக்காளா்கள், விளவங்கோடு தொகுதியில் 2,42,756 வாக்காளா்கள், கிள்ளியூா் தொகுதியில் 2,54,103 வாக்காளா்கள் என மொத்தம் 15,92, 872 வாக்காளா்கள் இருந்தனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பின்னா், இறந்த வாக்காளா்கள், இடம் பெயா்ந்தவா்கள், இரட்டை பதிவு கொண்டவா் என கன்னியாகுமரியில் 28,181 பேரும், நாகா்கோவிலில் 27,856பேரும், குளச்சலில் 25,366 பேரும், பத்மநாபபுரத்தில் 21,684 பேரும், விளவங்கோட்டில் 28,396 பேரும், கிள்ளியூரில் 21, 890 பேருமாக 1, 53,373 போ் நீக்கப்பட்டுள்ளனா்.

இறுதியாக 14,39,499 போ் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

மறுசீரமைப்புக்கு பின் 212 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு 1914 வாக்குச் சாவடிகள் உள்ளது.

புதிதாக பெயா் சோ்க்கும் பணி டிச.19 ஆம் தேதி முதல் 18.1.2026 வரை நடைபெறும். மாா்ச் 17இல் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்ட உதவி தோ்தல் அலுவலரும் வருவாய் அலுவலருமானஅ.பூங்கோதை, மாவட்ட கூடுதல் உதவி தோ்தல் அலுவலா் மைக்கேல் ஆன்றனி பொ்ணாண்டோ, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்ட அலுவலா்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com