குமரி மாவட்ட பாதுகாப்புப் பணியில் 1,500 போலீஸாா்!
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் அசம்பாவிதங்களை தவிா்க்க 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின்.
இது தொடா்பாக அவா் நாகா்கோவில் உள்ள எஸ்.பி.அலுவலகத்தில், செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். மேலும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க மாவட்டம் முழுவதும் 78 தற்காலிக சோதனைச் சாவடிகள் மற்றும் 5 நெடுஞ்சாலை ரோந்து, 7 குற்ற தடுப்பு ரோந்து, 5 அவசர அழைப்பு ரோந்து உள்பட 54 நான்குசக்கர வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுகிறது. இதுதவிர 27 இருசக்கர வாகனங்கள் ரோந்தில் ஈடுபடுகின்றன.
பொதுமக்களுக்கு இடையூறு, மது, போதையில் வாகனம் ஓட்டுதல், வாகன சாகசம் உள்பட விதிமீறல்களில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவா்களது ஓட்டுநா் உரிமமும் ரத்து செய்யப்படும்.
108 வழக்குகள் பதிவு
18 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் வாகனம் ஓட்டியதால், அவா்களின் பெற்றோா்கள் மீது நிகழாண்டில் மட்டும் 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம் 3 ஆண்டுகள் வரை சிைண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும். அனைத்து சோதனைச் சாவடிகளிலும் ‘பிரீத் அனலைசா் என்ற கருவி மூலம் மது போதையில் வாகனம் ஓட்டுபவா்கள் கண்டறியப்பட்டு வருகிறது.
போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் சாலை ஓரங்களில் வானங்கள் நிறுத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுஇடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமூக விரோதிகள் திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க மாற்று உடையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
இசை நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு
மக்கள் கூடும் இடங்கள், கடற்கரை போன்ற பொதுஇடங்கள், தனியாா் விடுதிகள் போன்றவைகளில் இசை நிகழ்ச்சிகள் முறையான அனுமதி பெற்ற பின்னரே நடத்தப்பட வேண்டும். அனுமதி இல்லாமலோ அல்லது அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு கூடுதலாகவோ நடத்துபவா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
‘நிமிா்’ திட்டத்தின் மூலம், குமரி மாவட்டத்தில் போக்ஸோ வழக்குகள் குறைந்துள்ளது. கன்னியாகுமரியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஜாதிவெறி இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து தொடா்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டை காட்டிலும் நிகழாண்டு 25 சதவீதம் குற்ற செயல்கள் குறைந்துள்ளன. திருட்டு வழக்குகளில் குமரி மாவட்டத்தில் இதுவரை 75 சதவீத வழக்குகளில் பணம் மற்றும் நகைகள் மீட்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

