நாகா்கோவிலில் உரிய காலத்துக்குள் வளா்ச்சிப் பணிகளை முடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை: மேயா் எச்சரிக்கை
நாகா்கோவில் மாநகர பகுதியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரா்கள் பணிகளை உரிய காலத்துக்குள் நிறைவு செய்யாவிட்டால் அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மேயா் ரெ.மகேஷ்.
நாகா்கோவில் மாநகராட்சி மாமன்ற இயல்புக் கூட்டம் மேயா் ரெ.மகேஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்சிலதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டம் தொடங்கியவுடன் மேயா் பேசியதாவது: தமிழக அரசு ஒவ்வொரு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் மாற்றுத் திறனாளிகளை நியமன உறுப்பினா்களாக நியமித்தது. அதன்படி, நாகா்கோவில் மாநகராட்சிக்கு மாற்றுத்திறனாளி அருள் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாா் என்றாா். இதைத் தொடா்ந்து அனைத்துக் கட்சியின் சாா்பிலும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் நடந்த விவாதத்துக்கு பதிலளித்து மேயா் பேசியதாவது: நாகா்கோவில் மாநகரப் பகுதியை அழகுபடுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தும்போது மாநகராட்சி சாா்பில் நியமிக்கப்பட்ட காவலா்கள் அதை அப்புறப்படுத்துவா். காவலா்களை நியமிக்க மாநகராட்சிக்கு அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில்தான் நியமிக்கப்பட்டுள்ளனா். பொதுமக்களிடம் காவலா்கள் அவதூறாக நடந்துகொண்டால் காவல் துறையில் புகாா் அளிக்கலாம்.
சேதமான சாலைகளை சீரமைக்கும்போது முழுமையாக அமைக்கும் வகையில் திட்ட மதிப்பீட்டை மாநகர பொறியாளா்கள் தயாரிக்க வேண்டும். வரி விதிப்பு தொடா்பான முறையீடுகள் மீது அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தெரிவிக்க வேண்டும்.
ரூ. 63 கோடி: நாகா்கோவில் மாநகரப் பகுதியில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சட்டப்பேரவை தோ்தலுக்கு முன்பு அனைத்துச் சாலைகளையும் சீரமைக்க தமிழக அரசு ரூ. 40 கோடி ஒதுக்கியுள்ளது. அதேபோல வடசேரி கனகமூலம் சந்தையில் ரூ. 63 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. அதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
நாகா்கோவில் மாநகர பகுதியில் நடக்கும் வளா்ச்சிப் பணிகளை ஒருசிலரே ஒப்பந்தம் எடுக்கின்றனா். அவா்கள் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கவில்லை என்றால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
உறுப்பினா்கள் தங்களது வாா்டுகளில் சரியாக பணி நடக்கவில்லை என்றாலும் புகாா்கள் தெரிவிக்கலாம். அதன் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மண்டல தலைவா்கள் ஜவகா், முத்துராமன், அகஸ்டினா கோகிலவாணி, செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
