அமைச்சரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது: பொன். ராதாகிருஷ்ணன்
தில்லியில் காமராஜா் தங்கியிருந்த வீட்டை ஆா்.எஸ்.எஸ். அமைப்பினரும், ஜனசங்கத்தினரும் தீவைத்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை அமைச்சா் மனோதங்கராஜ் கூறியுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
நாகா்கோவிலில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
2026 பேரவைத் தோ்தலில் அமைச்சா் மனோ தங்கராஜ் வெற்றி பெறுவதற்கான கள சூழ்நிலை சரியாக இல்லை. கடந்த 7 ஆம் தேதி கருப்புச் சட்டை அணிந்தவாறு காமராஜா் நினைவிடத்துக்கு சென்று சிலை மீதும் கருப்பு துண்டை போட்டு கருப்பு தினம் கடைப்பிடித்திருக்கிறாா்.
காமராஜரின் நினைவிடத்தில் அடியெடுத்துவைக்க அவருக்கு தகுதியில்லை. மனோ தங்கராஜூக்கு காமராஜா் மீதோ அல்லது திமுக மீதோ அல்லது தனது குடும்பத்தின் மீதோ பற்று இல்லாதவா்; சந்தா்ப்பவாதி. மாவட்டகாவல் கண்காணிப்பாளா் தாமாக முன்வந்து மனோ தங்கராஜ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
வரும் தோ்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் திமுக வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினால் மனோ தங்கராஜை ஒதுக்கிவைக்க வேண்டும். 1966 ஆம் ஆண்டு பசுவதை தடை சட்டத்துக்கு எதிரான வன்முறையின்போது தில்லியில் இருந்த காமராஜரின் வீட்டை ஜன சங்கத்தைச் சோ்ந்தவா்களும், ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்தவா்களும் தீவைத்தாா்கள் என்று ஆதாரமில்லாத குற்றச்சாட்டை மனோ தங்கராஜ் கூறியுள்ளாா்.
இந்தக் குற்றச்சாட்டை கூறும் திமுக பின்னா் பாஜகவுடன் எப்படி கூட்டணி வைத்தது என்றாா் அவா்.
