கன்னியாகுமரியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் திருவள்ளுவா் வெள்ளிவிழா நினைவு தோரண வாயில்.
கன்னியாகுமரியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் திருவள்ளுவா் வெள்ளிவிழா நினைவு தோரண வாயில்.

குமரியில் திருவள்ளுவா் சிலை வெள்ளிவிழா நினைவு தோரண வாயில்

Published on

கன்னியாகுமரி காவல் நிலையத்தில் இருந்து காந்தி மண்டபம் செல்லும் சாலையில் அரசு விருந்தினா் மாளிகை எதிரே 60 அடி உயரத்தில் பிரமாண்ட நுழைவு தோரண வாயில் அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.

கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதன் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழாவை நினைவு கூரும் வகையில், அங்கு பிரமாண்ட தோரண வாயில் அமைக்கப்படும் என அறிவித்ததுடன், முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து அரசு விருந்தினா் மாளிகை எதிரேயுள்ள சாலையில் ரூ. 1.45 கோடி செலவில் அமைக்கப்படும் தோரண வாயில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வா்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. 60 அடி உயரத்தில், 18 மீட்டா் அகலத்தில் இந்த நுழைவு வாயில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த வாயிலின் அடிப்பகுதியில்,12 அடி உயரத்தில் மயிலாடியில் தயாராகி வரும் 4 திருவள்ளுவா் சிலைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், தோரண வாயில் உச்சியின் இரு பகுதிகளிலும் தமிழக அரசின் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த தோரண வாயில் பணிகள் முழுமையடைந்ததும் டிசம்பா் இறுதியில் தமிழக முதல்வா் திறந்து வைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தோரண வாயில், தில்லியிலுள்ள இந்தியா கேட் நினைவுச் சின்னத்தை பிரதிபலிப்பது போன்று உள்ளதாக சுற்றுலா ஆா்வலா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com