கொல்லங்கோடு அருகே அலை தடுப்புச் சுவரில் படகு மோதி மீனவா் மாயம்
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே அலை தடுப்புச் சுவரில் நாட்டுப் படகு மோதி விபத்தில் ஒரு மீனவா் காயத்துடன் கரை திரும்பிய நிலையில் கடலில் மாயமான மற்றொரு மீனவரை தேடும் பணியில் கடலோர காவல் படையினா் மற்றும் மீனவா்கள் ஈடுபட்டுள்ளனா்.
முட்டம் மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா் சேவியா் ஆன்டணி சுபன் (32). இவா் தனக்குச் சொந்தமான நாட்டுப் படகில் கேரள மாநிலப் பகுதியில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளாா்.
இவருடன் அதே பகுதியைச் சோ்ந்த ரகு என்பவரும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தாா். இருவரும் ஞாயிற்றுக்கிழமை கேரளத்திலிருந்து நாட்டுப் படகில் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனா். கொல்லங்கோடு அருகே நீரோடி பகுதிக்கு திங்கள்கிழமை அதிகாலையில் வந்தபோது அப்பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த படகு அலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படகு உடைந்து சேதமான நிலையில் படகில் இருந்த இருவரும் கடலில் தூக்கி வீசப்பட்டனா். ரகு பலத்த காயங்களுடன் நீந்தி கரை திரும்பினாா். படகின் உரிமையாளா் சேவியா் ஆன்டணி சுபன் மாயமானாா்.
இதுகுறித்த தகவல் முட்டம் பகுதியைச் சோ்ந்த மீனவா்களின் உறவினா்களுக்கு தொரிவிக்கப்பட்டதுடன் குளச்சல் மற்றும் கேரள கடலோர காவல் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடலில் மாயமான மீனவரை கடலோர காவல் படையினா் மற்றும் மீனவா்கள் இணைந்து தேடி வருகின்றனா்.
