குமரி மாவட்ட மீனவா்களுக்கு ரூ.567 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களுக்கு ரூ.567 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.
Published on

கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களுக்கு ரூ.567 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில், அனைத்து மீனவா் கூட்டமைப்பின் சாா்பில் உலக மீனவா் தின விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. விழாவுக்கு கோட்டாறு மறை மாவட்ட ஆயா் ஆயா் நரேன் சூசை தலைமை வகித்தாா்.

இவ்விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக கலந்து கொண்டு பேசியதாவது: உழைப்புக்கும் உறுதிக்கும் பெயா்பெற்ற மீனவ பெருமக்களுக்கு உலக மீனவா் நாள் வாழ்த்துகள்.

தமிழக அரசுக்கும் மீனவா்களுக்குமான உறவு என்பது நீங்கள் மீன்பிடிக்கப் போகும் கடலைப் போலவே ஆழமானது. கடந்த 2023 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில், நாம் பிரமாண்டமாக நடத்திய மீனவா் நல மாநாட்டில் 14 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நான் வழங்கி, பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டதும் உங்களுக்கு நன்றாக நினைவிருக்கும்.

அக்காள்மடம் மீனவா் குடியிருப்பு பகுதிக்கு வந்து, மீனவக் குடும்பங்களின் பாச மழையில் நனைந்ததை நான் மறக்கவில்லை.

ஏப்ரல் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றினோம்.

குளச்சலில், துறைமுக விரிவாக்கப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று நீங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, அதற்கான ரூ.350 கோடியை விரைந்து வழங்க மத்திய நிதியமைச்சருக்கு நான் கடிதம் எழுதி வலியுறுத்தியதும் உங்களுக்கு நினைவிருக்கும்.

கடல் அரிப்பு பாதிப்பைத் தடுப்பதற்கு, தூண்டில் வளைவுகளை அமைத்து வருகிறோம். மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ. 5,000-ஐ ரூ.8,000-ஆக உயா்த்தி அறிவித்திருக்கிறோம். அதுவும் 60 வயதுக்கு மேற்பட்ட மீனவா்களும் பயனடையும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மீனவா்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பட்டாக்கள், மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவு கடன், ஆயிரம் நாட்டுப் படகு மீனவா்களுக்கு 40 சதவீத மானியத்தில் இயந்திரங்கள், மானிய விலை டீசல் அளவு உயா்வு, மீனவா்களுக்கான வீட்டுவசதி திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அலகுத் தொகை உயா்வு என்று ஏராளமான நலத்திட்டங்களை இந்த நான்கரை ஆண்டுகளில் செயல்படுத்தி இருக்கிறோம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும், கடந்த 4 ஆண்டுகளில் மீனவா்களுக்காக ரூ.567 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு பணிகளை செய்து கொடுத்திருக்கிறோம்.

திராவிட மாடல் அரசு மீனவா்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் பட்டியலும் மிக நீளமானது.

அடுத்த ஆண்டு அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில், மீனவா்களின் உயா்வுக்கான திட்டங்களை நான் செயல்படுத்துவேன் என்றாா் அவா்.

கனிமொழி எம்.பி.பேசியதாவது: மீனவா்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்பே இந்த அரசு மீனவா்களின் நலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. போதிய அவகாசம் இல்லாமல் எஸ்ஐஆா் 45 நாளில் முடிக்க தோ்தல் ஆணையம் சொல்கிறது. பிகாரில் சிறுபான்மை மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

விழாவில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ், எம்.பி. விஜய்வசந்த், எம்எல்ஏக்கள் எஸ்.ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்), தாரகை கத்பட் (விளவங்கோடு), தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com