குளச்சல் அருகே மீனவா்கள் ஆா்ப்பாட்டம்
கடலில் மீனவா்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, குளச்சல் அருகே சைமன் காலனியில் வெள்ளிக்கிழமை மாலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
குளச்சல், வாணியக்குடி, குறும்பனை, கோடிமுனை, சைமன் காலனி, கொட்டில்பாடு, கடியப்பட்டினம் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் கேரள மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகளில் தெற்கு, கிழக்குக் கடல் பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுவதாகவும், இதனால் கடந்த 2 வாரங்களாக தொழில் செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், உலக மீனவா் தினமாக வெள்ளிக்கிழமை சைமன் காலனியில் உள்ள மீன்பிடிப் பயிற்சி நிலைய துணை இயக்குநா் அலுவலகம் முன், அவா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள், வாணியக்குடி பங்குப்பேரவை துணைத் தலைவா் ஆரோக்கியம், செயலா் ஜிம்சன், பொருளாளா் ஸ்டாலின், விசைப்படகு உரிமையாளா் நலச் சங்கத் தலைவா் ஜேம்ஸ், செயலா் குமாா், பொருளாளா் ராஜேஷ், திரளான பெண்கள் பங்கேற்றனா். காவல் துறையினரின் பேச்சுவாா்த்தையை அடுத்து, இரவில் போராட்டம் நிறைவடைந்தது.

