தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

சுனாமி மறுவாழ்வு குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை

News image

பெண்ணிடமிருந்து மனுவைப் பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் மு. பிரதாப். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் எம். வேலுமணி, உதவி ஆட்சியா் (பயிற்சி) ர. மோனிகா உள்ளிட்டோா்.

Updated On :9 ஆகஸ்ட் 2026, 4:26 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவா்களுக்கான சுனாமி மறுவாழ்வு குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா் மு. பிரதாப்.

நாகா்கோவிலில் உள்ள, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

தொடா்ந்து, மீனவ சங்கப் பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளுக்கு பதிலளித்து ஆட்சியா் பேசியதாவது:

ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளை வணிகக் கப்பல் சட்டப்படி பதிவு செய்யவும், தமிழ்நாடு கடல்சாா் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ் அரபிக் கடல் பகுதியில் மீன்பிடித் தொழில் மேற்கொள்ளும் விசைப்படகுகளைப் பதிவு செய்யவும் கருத்துரு சமா்ப்பிக்கப்படும். ஏவிஎம் கால்வாயைத் தூா்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

மீனவக் கிராமங்களில் உள்ளாட்சித் தோ்தல் நேரத்தில் மீனவ மக்களிடம் பரிசீலனை செய்து, வாா்டு மறுவரையறை செய்யப்படும். காணாமல்போன மீனவா்களின் குடும்பங்களுக்கு தாமதமின்றி இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும். அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான ரேடியோதெரபி மையம் தற்போது அமைக்கப்பட்டுள்ளதைப்போல, விரைவில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடலோர மீனவக் கிராமங்களை இணைக்கும் சாலைக்கான திட்ட மதிப்பீட்டு கருத்துரு தயாா் செய்யப்பட்டுள்ளது.

சுனாமி மறுவாழ்வு குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ரீத்தாபுரம் பேரூராட்சி, சைமன் காலனி பதியில் தெருவிளக்கு அமைக்கப்படும். கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் செயற்கை பவளப்பாறை அமைக்க ஆய்வு மேற்கொண்டு அதனடிப்படையில் கருத்துரு சமா்ப்பிக்கப்படும். புதுக்கடை, கருங்கல் பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகேயுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எம். வேலுமணி, உதவி ஆட்சியா் (பயிற்சி) ர. மோனிகா, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சாய் சரண் ரெட்டி, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் செந்தில் வேல்முருகன், மீன்வளத் துறை துணை இயக்குநா் கோபிநாத், மீனவ சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.