நாகா்கோவில் நீதிமன்றத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
நாகா்கோவில் நீதிமன்றத்துக்கு, 3 ஆவது முறையாக புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடா்ந்து போலீஸாரும், வெடிகுண்டு நிபுணா்களும் சோதனை மேற்கொண்டனா்.
நாகா்கோவிலில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிட்டு இ - மெயில் ஒன்று வந்துள்ளதாக நீதிமன்ற ஊழியா்கள், நீதிபதியிடம் தகவல் தெரிவித்தனா்.
நீதிபதி, மாவட்ட காவல் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின்பேரில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் மோப்ப நாயுடன் நீதிமன்ற வளாகத்துக்கு சென்றனா். நீதிமன்றத்திலிருந்து நீதிபதிகள், வழக்குரைஞா்கள், பொதுமக்கள் வெளியேறியதும், போலீஸாா் அங்கு சோதனை மேற்கொண்டனா். இது புரளி என தெரியவந்தது.
கடந்த ஒரு மாதத்துக்குள் ஏற்கெனவே 2 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்த நிலையில், புதன்கிழமை 3 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

