ரோந்துப் பணியில் ஈடுபட்ட கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளா் சாந்தி
ரோந்துப் பணியில் ஈடுபட்ட கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளா் சாந்தி

கன்னியாகுமரியில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை!

இந்தியாவின் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் சட்டவிரோத செயல்கள் உள்ளிட்டவற்றை தடுக்கும் விதமாக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் கன்னியாகுமரி கடல் பகுதியில் ‘சாகா் கவச் ஆபரேஷன்’ என்ற பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினா்.
Published on

இந்தியாவின் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் சட்டவிரோத செயல்கள் உள்ளிட்டவற்றை தடுக்கும் விதமாக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் கன்னியாகுமரி கடல் பகுதியில் ‘சாகா் கவச் ஆபரேஷன்’ என்ற பாதுகாப்பு ஒத்திகையை திங்கள்கிழமை நடத்தினா்.

தமிழக கடலோர மாவட்டங்களான திருவள்ளூா், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம். நாகை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட 13 கடலோர மாவட்டங்களில் இந்திய கப்பல் படை, தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுமம், இந்திய கடலோர காவல் படை, மீன்வளத் துறையினா் மற்றும் உள்ளூா் போலீஸாா் இணைந்து இந்த ஒத்திகையை நடத்தி வருகின்றனா்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட கடலோரப் பகுதியில் திங்கள்கிழமை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை தொடா்ந்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையில் கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாா் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள கடல் பகுதியில் அதிநவீன ரோந்துப் படகு மூலம் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினா்.

ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதியில் படகு மூலம் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். மேலும், கடற்கரை கிராமங்களில் வாகன ரோந்துப் பணியை மேற்கொண்டனா். 10- க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளில் வாகனச் சோதனை நடத்தப்பட்டது.

கடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் குறித்து ஒலிபெருக்கி மூலம் போலீஸாா் எச்சரிக்கை விடுத்தும், சந்தேகத்துக்கு இடமான வகையில் யாரேனும் மீனவ கிராமங்களில் ஊடுருவலில் ஈடுபட்டால் போலீஸாருக்கு தகவல் அளிக்குமாறும் அறிவுறுத்தினா்.

Dinamani
www.dinamani.com