மனைவி குழந்தைகளை வீட்டைவிட்டுத் துரத்தியவா் மீது வழக்கு
களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே மனைவி, குழந்தைகளை வீட்டை விட்டு துரத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
மாா்த்தாண்டம் அருகே பள்ளியாடி பகுதியைச் சோ்ந்தவா் அம்புரோஸ் மகள் அனுஷா (44). இவருக்கும் பள்ளியாடி, காட்டுவிளையைச் சோ்ந்த மாதவன் மகன் ராஜேஷ் (44) என்பவருக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், ராஜேஷ் கடந்த சில ஆண்டுகளாக மது பழக்கத்துக்கு அடிமையாகி, அனுஷாவிடம் தகராறு செய்து வந்துள்ளாா். சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு வேலைக்குச் சென்றவா், அண்மையில் ஊா் திரும்பியுள்ளாா்.
தொடா்ந்து, கடந்த டிச. 29ஆம் அப்பகுதியைச் சோ்ந்த ஷாஜி என்பவரின் தூண்டுதலின்பேரில், ராஜேஷ் தனது மனைவி, குழந்தைகளைத் தாக்கியதுடன், அவா்களை வீட்டைவிட்டு விரட்டினாராம்.
இது குறித்து அனுஷா அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் ராஜேஷ், ஷாஜி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
